/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நல்ல கதை இருக்கா... எங்கேயோ போயிரலாம்! நடிகர் ரமேஷ் கண்ணா 'நச்'
/
நல்ல கதை இருக்கா... எங்கேயோ போயிரலாம்! நடிகர் ரமேஷ் கண்ணா 'நச்'
நல்ல கதை இருக்கா... எங்கேயோ போயிரலாம்! நடிகர் ரமேஷ் கண்ணா 'நச்'
நல்ல கதை இருக்கா... எங்கேயோ போயிரலாம்! நடிகர் ரமேஷ் கண்ணா 'நச்'
ADDED : மார் 08, 2025 11:41 PM

திரைப்பட இயக்குனர், நகைச்சுவை நடிகர் என பல்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தியவர் ரமேஷ்கண்ணா.
நமது நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:
தரமான கதையுள்ள படங்கள் வெற்றியடையும் என, கூறப்பட்டாலும், பெரிய நடிகர், இயக்குனர் படங்கள் வெளியாகும் அன்று, நல்ல கதையுள்ள படங்கள் திரையிட தயங்குவதேன். அப்படி எனில் கதைக்கு முக்கியத்துவம் இல்லை, வசூலுக்கு தான் முக்கியத்துவமா?
அப்படியில்லை. பெரிய நடிகர்களின் படங்களுக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. அதனால், அனைத்து தரப்பினருக்கும் நல்ல வருவாய் உள்ளது. ஆனால், சிறிய படங்கள் அவ்வாறு இல்லை. முதலில் ஒரு தயக்கம் மக்களிடம் இருக்கும்.
அதன் பின்னரே நல்ல கதை எனத் தெரிந்து, அனைவரும் படம் பார்க்க வருவர். பெரிய படங்கள் கூட தோல்வி அடைகின்றன. சின்னப்படங்களும் வெற்றி பெறுகின்றன. கதை தான் முக்கியம். சின்னப்படங்களுக்கான தியேட்டர்கள் வேண்டும்.
கதாநாயகனுக்கு, 200 - 250 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. இப்பணத்தை கொண்டு மற்ற மாநிலங்களில் முழு திரைப்படமே எடுத்து விடுகின்றனர். தமிழ் திரையுலகம் இன்னும் கதாநாயகர்களை நம்பித்தான் உள்ளதா? கதை, திரைக்கதைக்கு முக்கியத்துவம் இல்லையா?
கதையை நம்பிதான் திரைப்படங்கள் உள்ளன. கதையம்சம் உள்ள சிறிய பட்ஜெட் படங்கள் சமீபகாலமாக வெற்றி பெறுகின்றன. இது நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வெற்றி பெறுவதைத்தான் குறிக்கின்றது. பெரிய ஹீரோக்களின் படங்கள் கூட, தோல்வி அடைந்துள்ளனவே.
புது இயக்குனர்களுக்கு படைப்புகளை வெளிக்கொண்டு வர களம் உள்ளதா? தயாரிப்பு துறையில் தயக்கமா அல்லது ஆதரவு அளிக்கப்படுகிறதா?
எடுத்த உடன் படத்தை இயக்க முயலக்கூடாது. ஓரிரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிவது அவசியம். அப்போது தான் நடைமுறை அனுபவம் கிடைக்கும். தயாரிப்பாளர்கள் இன்று யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஆதரவு தர தயாராக உள்ளனர்.
நல்ல கதை, திரைக்கதையுடன் செல்லும் அறிமுக இயக்குனர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுகின்றனர். அதற்கு சமீபத்திய இளம் இயக்குனர்களின் படங்கள் வெற்றி பெற்றது உதாரணம்.
'ரீரிலீஸ்' படங்களுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால், பல தரமான படங்கள் எடுக்கப்பட்டு அவை திரையிடப்படாமல் இன்னும் பெட்டியிலேயே உள்ளன. அவற்றை திரையிடுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
என் படமே, 10 படங்கள் வெளிவராமல் உள்ளன. இதற்கு சிறிய அளவிலான திரையரங்குகள் வேண்டும். சென்னையில் பல சிறிய அளவிலான தியேட்டர்கள் இருந்தன. பெட்டியில் உறங்கும் படங்களை வெளிக்கொண்டு வர, தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும். அனைவரும் சினிமா பார்க்க ஆசை இருக்கத்தான் செய்கிறது. சினிமாவை யாராலும் அழிக்க முடியாது. பரிணாமங்கள் மாறிக்கொண்டே இருக்குமே தவிர, அது அழியாது.
சமீபகாலமாக ஆஸ்கர் விருதுக்கு தமிழ் திரைப்படங்கள் ஏராளமாக பரிந்துரைக்கப்படுகின்றன. அதற்கான திறமை நம் இயக்குனர்களுக்கு வந்து விட்டதா அல்லது ஆஸ்கர் விருது பெறுவதற்கான சூட்சமம் இப்போதுதான் தெரிந்ததா?
ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்கள் எடுக்கும் அளவுக்கு, நம் இயக்குனர்களின் திறமை வளர்ந்துள்ளது என்று தான் கூற வேண்டும். இன்று பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. அதற்கு ஏற்றார் போல், இயக்குனர்கள் தங்களை மாற்றிக் கொண்டு வருகின்றனர். வெற்றி பெற்று பணம் சம்பாதிப்பதை குறிக்கோளாக கொள்ளாமல், இதுபோன்ற விருதுகளுக்காகவும் இன்று திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.