/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொறுப்பை தட்டிக் கழிக்கும் அதிகாரிகள்; நகரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு
/
பொறுப்பை தட்டிக் கழிக்கும் அதிகாரிகள்; நகரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு
பொறுப்பை தட்டிக் கழிக்கும் அதிகாரிகள்; நகரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு
பொறுப்பை தட்டிக் கழிக்கும் அதிகாரிகள்; நகரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு
ADDED : மே 05, 2024 11:13 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில், பிரதான வீதிகள், ஏற்கனவே ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், புதிதாக திறக்கப்படும் ரோட்டோர கடைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கின்றனர்.
பொள்ளாச்சி நகரில் உள்ள பெரும்பாலான ரோடுகள், ஆக்கிரமிப்பு காரணமாக குறுகி காணப்படுகிறது. ஒரு சில பகுதிகளில், கட்டட உரிமையாளர்கள் தங்கள் கட்டடங்களின் முன்பக்கம் ஆக்கிரமிப்பு செய்வது சகஜமாக உள்ளது.
ரோட்டோரங்களிலும், மழைநீர் வடிகால் அமைப்பு, பாதசாரிகள் நடைபாதை போன்ற இடங்களில் ஏற்படும் ஆக்கிரமிப்பு, வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
அவ்வகையில், ராஜாமில் ரோடு, புது பஸ் ஸ்டாண்ட் ஒட்டிய பகுதிகள், தபால் அலுவலகம் ரோடு என, பிரதான ரோடுகளில் புதிய ஆக்கிரமிப்பு துவங்கியுள்ளது. ரோடு வளைவு பகுதியில் இத்தகைய ஆக்கிரமிப்பு கடைகள் அமைந்துள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்துவதால், அவ்வழியே கடந்து செல்லும் பிற வாகன ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர்.
இதேபோல, கடைவீதிகளில் இரு புறமும் ஆக்கிரமிப்புகளும், கடைகளுக்கு வரும் வாகனங்கள் ரோட்டிலேயே, தாறுமாறாக நிறுத்தப்படுவதாலும், ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியாமல் கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
நகராட்சி மற்றும் போக்குவரத்து போலீஸ் சார்பில், ஒரு வழிப்பாதை திட்டம், 'பார்க்கிங்' இடத்தை வரையறுக்கும் திட்டமும், ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதோடு, சரக்கு வாகனங்கள் அனைத்து நேரங்களிலும் அனுமதிப்பது உள்ளிட்ட காரணங்களினால், வாகன நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகிறது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தென்னங்கீற்றில் புதிய பந்தல் அமைப்பது, புதிய இறைச்சிக்கடைகள், புதிய காய்கறி கடைகள் என, தொடர்ந்து ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. பல இடங்களில், இதுவரை, தென்னை ஓலையில், சிறிய பந்தல் அமைந்து வந்த நிலைமாறி, தகர 'ஷீட்' அமைத்து, நிரந்தர கடையை அமைத்துள்ளனர்.
இதேபோல, ஆனைமலை ரோட்டில், ஜமீன் ஊத்துக்குளி, நஞ்சேகவுண்டன்புதுார், அம்பராம்பாளையம் பகுதியில் கடைகள் அமைத்துள்ளனர்.
கோட்டூர் ரோட்டில் சூளேஸ்வரன்பட்டி ரோட்டை ஒட்டி குடியிருப்பு வீடுகளைச் சேர்ந்தவர்களும் கடை அமைத்து, படிப்படியாக நெடுஞ்சாலைத்துறை நிலத்தை ஆக்கிரமிக்க துவங்கி உள்ளனர்.
இதற்கு உள்ளாட்சி அமைப்பு கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவிப்பதும் வேடிக்கையாக உள்ளது. தடைசெய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கவும்,ஆக்கிரமிப்புகளை அகற்றவும் துறை ரீதியான அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.