/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிபில் ஸ்கோரால் திணறும் தொழில்துறையினர் தனியார் நிறுவனங்களின் பிடியில் சிக்கும் அவலம்
/
சிபில் ஸ்கோரால் திணறும் தொழில்துறையினர் தனியார் நிறுவனங்களின் பிடியில் சிக்கும் அவலம்
சிபில் ஸ்கோரால் திணறும் தொழில்துறையினர் தனியார் நிறுவனங்களின் பிடியில் சிக்கும் அவலம்
சிபில் ஸ்கோரால் திணறும் தொழில்துறையினர் தனியார் நிறுவனங்களின் பிடியில் சிக்கும் அவலம்
ADDED : செப் 17, 2024 05:38 AM
கோவை: தொழில் நிறுவனங்களுக்கான வங்கி கடன் பெறுவதில், 'சிபில்' மதிப்பீடு குறைவு என 90 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக அதிருப்தி எழுந்துள்ளது.
தொழில்முனைவோருக்காக, வங்கிகளில் முத்ரா கடன் வழங்கப்படுகிறது. மேலும், மத்திய, மாநில அரசுகளின் கீழ், பல்வேறு திட்டங்களின் கீழ், மானியத்துடன் கடன் வழங்கப்படுகின்றன. கடந்த பட்ஜெட் அறிவிப்பில், முத்ரா கடனில் ஒரு பிரிவான தருண் கடன் வரம்பு, 10 லட்சம் ரூபாயிலிருந்து, 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கிகளில் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே முத்ரா கடன் பிரிவில் மீண்டும் மீண்டும் கடன் வழங்கப்படுவதாகவும், புதிதாக கடனுக்கு விண்ணப்பிப்பவர்களும், சிறு குறு நிறுவனங்களும் விண்ணப்பிக்கும் போது பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, சிபில் ஸ்கோர் மதிப்பீடு முறை காரணமாக சிறு, குறு நிறுவனங்கள் கடன் பெற முடிவதில்லை எனவும், இதனால், அதிக வட்டிக்கு தனியார் நிறுவனங்களில் கடன் பெற்று, பொருளாதார ரீதியாக பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பாதிக்கப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன், கொடிசியா அரங்கில் நடந்த தொழில்துறையினர் சந்திப்பு கூட்டத்திலும் இப்பிரச்னை குறித்து பேசப்பட்டது. அதில் பங்கேற்ற அதிகாரிகள் தொழில்நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு நிதி சார்ந்த ஒழுங்குமுறை விழிப்புணர்வு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, போசியா ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறுகையில்,'' சிறு, குறு தொழில்நிறுவனங்கள் கடன் பெறுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றோம். சிபில் குறித்த விழிப்புணர்வு பெரிதாக இல்லை. மேலும், தொழில்நிறுவனங்களை பொறுத்தவரையில், ஆறு மாதம் பணிகள் இருக்கும், ஆறு மாதம் பணிகள் மந்தமாக இருக்கும் அச்சமயம் வட்டியை செலுத்த முடியாமல் சிபில் மதிப்பீட்டில் அடிவாங்கும். இதனால், 90 சதவீத சிறு, குறு தொழில்நிறுவனங்கள் வங்கிக்கடன் பெற முடிவதில்லை.
''தொழில்நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் போது, வங்கி செயல்பாடுகள், வருமானம், எத்தனை ஆண்டுகள் செயல்படுகிறது போன்றவற்றை மையமாக கொண்டு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்,'' என்றார்.