/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு வேலையில் சேர அரசே தடையாக இருப்பதா! மாவட்ட மைய நுாலகத்தில் படிக்கட்டில் நடக்கிறது படிப்பு வளாகத்தில் அமரலாம் என்றால் அச்சத்தில் எகிறுது இதய துடிப்பு

ADDED : ஆக 20, 2024 01:04 AM

கோவை;போட்டித்தேர்வுகளில் பங்கேற்று படிக்க, கோவை மாவட்ட மைய நுாலகம் வருபவர்களுக்கு போதிய இடம் இல்லை. படிக்கட்டுகளிலும், தரையிலும் அமர்ந்து படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நுாலகத்தின் வெளியே பராமரிப்பின்றி இருப்பதால், அங்கும் அமர்ந்து படிக்க முடியாமல் இளைஞர்கள் தவிக்கின்றனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் கவுலிபிரவுன் ரோட்டில், மாவட்ட மைய நுாலகம் செயல்படுகிறது. இங்கு தினமும், 400 முதல் 600 வரை வாசகர்கள் படிக்க வருகின்றனர்.
இதில் பெரும்பாலானவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., டி.என்.பி.எஸ்.சி., ரயில்வே மற்றும் வங்கி தேர்வுகளுக்கு படிப்பவர்கள். இந்த நுாலகத்தில் இரண்டு தளங்கள் உள்ளன.
படிக்கட்டில் அமர்ந்து படிப்பு
கீழ் தளம், பொது வாசகர்களுக்கான பகுதியாக உள்ளது. மேல் தளத்தில் ஒரு சிறிய பகுதி மட்டும் போட்டி தேர்வுக்கு படிப்பவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் 20 பேர் மட்டுமே அமர முடியும்.
தினமும் போட்டி தேர்வுக்கு படிக்க வருபவர்கள் எண்ணிக்கை, 200க்கும் மேல் அதிகரித்துள்ளது. வாசகர்கள் அமர்ந்து படிக்க போதிய இடமும், நாற்காலிகளும் இல்லாததால், படிக்கட்டுகளிலும், நுாலக வளாகத்தில் உள்ள மரத்தடியிலும், கட்டட நிழலிலும் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நுாலக வளாகம் முட்செடிகள் மண்டி, சுகாதாரமின்றி புதர் போல் காட்சியளிக்கிறது. நுாலகத்தில் போதிய கழிப்பறைகள் இல்லாததால், நுாலக வளாகத்துக்குள் பலர் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், வெளியில் அமர்ந்து படிப்பதும் சாத்தியமற்றதாகி வருகிறது.
மதிய உணவு கொண்டு வரும் வாசகர்கள், அமர்ந்து சாப்பிட இடம் இல்லாமல், இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். நுாலகத்தில் போதிய இடவசதி இருந்தும், மாவட்ட நுாலகத்துறை எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுப்பதில்லை என, வாசகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
விரைவில் சரி செய்யப்படும்
கோவை மாவட்ட நுாலக ஆணைக்குழு அலுவலர் ராஜேந்திரனிடம் கேட்ட போது, ''கடந்த வாரம் மாவட்ட மைய நுாலகத்தை, நுாலக இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார். தேவையான கட்டமைப்புகளை செய்ய, 53 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் செய்வதற்கான ஆர்டர் வந்து விட்டது. தேவையான அறைகள் மற்றும் உணவு கூடம் அமைக்க இருக்கிறோம். இந்த வாரத்தில் பணிகள் துவங்க உள்ளன. இன்னும் ஆறு மாதங்களில், இந்த குறைகள் அனைத்தும் சரி செய்யப்படும்,'' என்றார்.
இளையதலைமுறை மீது தனிக்கவனம் செலுத்தி, திட்டங்களை வகுத்து வருவதாக கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர், முதலில் இளைஞர்கள் பயன்படுத்தும் இது போன்ற நுாலகங்களை சீரமைக்க வேண்டும்.