/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளிர்விக்க கூட்டு முயற்சி தேவை!
/
குளிர்விக்க கூட்டு முயற்சி தேவை!
ADDED : மே 01, 2024 12:15 AM

கோவை என்றால் இதமான காலநிலை, இனிமையான சிறுவாணி குடிநீர், வளமான விவசாய பூமி என்று வர்ணித்த காலம், இப்போது கடந்த கால வரலாறாகி விட்டது. ஈரக்காற்று தான் கோவைக்கான அடையாளம். ஆனால் கடந்த 30 ஆண்டுகளில், கட்டமைப்புத் திட்டம், தொழில் வளர்ச்சி என சில காரணங்களைச் சொல்லி, கோவையின் இயற்கையும், தனித்துவமும் சிதைக்கப்பட்டுள்ளன. சாலை விரிவாக்கத்துக்காக பல ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. விளை நிலங்கள், குடியிருப்புகளாக உருமாற்றப்பட்டுள்ளன. குளங்கள், சாக்கடை சங்கமமாகியுள்ளன.
விளைவு, கோவையின் வெப்பநிலை 40.4 டிகிரியைத் தொட்டுள்ளது. அடித்துத் துவைக்கும் வெயிலில் வெளியில் செல்வதே கஷ்டமென்ற நிலையில், விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், கூலிப் பணியாளர்கள் வேலை செய்யும் கொடுமையை நினைத்தாலே, கண்ணைக் கட்டி விடும். காலநிலை மாற்றத்தின் வெளிப்பாடு இது என்று எளிதில் கடந்து போக முடியவில்லை.
அதெல்லாம் அந்தக்காலம்
கோடை காலத்தில் கோவையிலும் வெப்பத்தின் தாக்கம் இருக்கும்; ஆனால் மற்ற ஊர்களைப் போல, வெயில் கொடூரமாக இருக்காது. லேசான காற்று இருக்கும்; அதில் ஈரம் இருக்கும். கொஞ்சம் வியர்த்தாலும் அடங்கி விடும். இரவில் இன்னும் இதமாகிவிடும். ஆனால் இப்போது இரவிலும் வீடுகளில் வெப்பம் வாட்டி எடுக்கிறது; வியர்த்துக் கொட்ட துாக்கம் தொலைகிறது.
மறுநாள் பணிக்குச் செல்வது கஷ்டமாகிறது; உடல்நிலை கெடுகிறது. காடுகள், கான்கிரீட் காடுகளாகி விட, சாலையோரம் இருந்த மரங்கள், சோலைகளுக்கு நிரந்தர சமாதி கட்டப்பட்டு விட்டது. ஒரு மரம் வெட்டினால், மாற்றாக ஒன்றுக்கு 10 மரங்கள் வளர்க்க வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவும் சேர்த்து புதைக்கப்பட்டு விட்டது. எந்த அரசுத்துறையும் இதை இன்று வரை செயல்படுத்தவில்லை.
கடந்த 25 ஆண்டுகளில், கோவை நகரில் சாலை உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகளுக்காக, 10 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன; மாற்று மரங்களாக ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கப்பட்டிருக்க வேண்டும்; ஆனால் ஆயிரம் மரங்கள் கூட வளர்க்கப்படவில்லை என்பதே நிஜம். இதே காலகட்டத்தில், வாகனங்கள் எண்ணிக்கையும், காற்று மாசும் அதிகமாகிவிட்டது. நகரின் வெப்பநிலை எகிறுகிறது.
மழை பெய்யும் நாட்கள் குறைந்துவிட்டது; நவம்பர், டிசம்பரில் பெருவெள்ளம் பாய்கிறது; நான்காவது மாதத்தில் குளங்கள் காய்கிறது.
நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்துக்குப் போய் விடுகிறது. கழிவுநீர் கலப்பு காரணமாக, அந்த நீரும் விஷமாகிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் சரி செய்து, கோவையை மீண்டும் குளுமையான நகரமாக, வருங்கால சந்ததி வாழத்தகுதியுள்ள மண்ணாக மாற்ற முடியுமா...
கூடிச் செய்தால் கோடி நன்மை
நிச்சயமாக முடியும். ஆனால் அது தனி ஒருவன் செய்கிற மந்திரமில்லை; ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர். அரசும், மக்களும் இணைய வேண்டும்; தொழில் அமைப்புகள், கல்வி, தொழில், வர்த்தகம் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் ஓரணியில் கரம் கோர்க்க வேண்டும்; கோவையிலுள்ள எல்லா கல்வி நிறுவனங்களிலும், காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதலை ஒரு பாடமாக, செயல்முறையுடன் கற்பிக்க வேண்டும்.
சூழல் பிரச்னைக்கான தீர்வுகளை, Seminar, Mini Project Report ஆக மாணவர்களிடமே தீர்வு காண வேண்டும். மாதமிரு நாள், மாணவர்களை மரம் நடுதல், நீர்நிலை மீட்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
அரசுக்கும் பல கடமைகள் இருக்கின்றன. சாலைகள் உயரம் அதிகரிப்பதால், வீடுகள் பள்ளமாகி, வெள்ளம், கழிவுநீர் பாய்கிறது. அதனால் வீடுகளை இடித்துக்கட்ட வேண்டியுள்ளது.
அதற்கு மீண்டும், கல், மணல் தேவைப்படுகிறது; இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. சாலைகள் உயரத்தைக் குறைத்துப் புதுப்பிக்க வேண்டும்; மரம் நட, சாலைச் சீரமைப்பு நிதியிலேயே தொகை ஒதுக்குவது அவசியம்.
மாநகரப் பகுதிகளில் விவசாயம் செய்வோருக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்; ரிசர்வ் சைட் இடங்களில், அதிகளவு மரங்களை நட்டுப் பராமரிக்க வேண்டும்.
வளி மண்டலத்தை பாழ்படுத்தி, சூழலைச் சூடாக்கும் ஏ.சி.,பயன்பாட்டைக் குறைப்பது, மக்களின் பொறுப்பு. மட்கும் குப்பைகள், கழிவுகள், மாட்டுச்சாணத்திலிருந்து மீத்தேன் தயாரித்து, அதை எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.
அதனால் பெட்ரோலியப் பொருள் பயன்பாடும், நச்சு வாயு உற்பத்தியும் குறையும்.
அரசும், மக்களும் இணைந்து செயல்பட்டால் கோவை குளுமையாகும்; தமிழகத்தின் வெப்பம் தணியும்!