/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்ப்பதா! கோர்ட் உத்தரவு அமல்படுத்த வலியுறுத்தல்
/
ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்ப்பதா! கோர்ட் உத்தரவு அமல்படுத்த வலியுறுத்தல்
ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்ப்பதா! கோர்ட் உத்தரவு அமல்படுத்த வலியுறுத்தல்
ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்ப்பதா! கோர்ட் உத்தரவு அமல்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஏப் 18, 2024 11:54 PM
கோவை;மத்திய மண்டலத்தில் பொதுப் பாதை ஆக்கிரமிப்பை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி நிர்வாக முதன்மை செயலரிடம் முறையிடப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாக அரசு முதன்மை செயலர் கார்த்திகேயனுக்கு, ஊழல் எதிர்ப்பு இயக்க கோவை மாவட்ட பிரிவு செயலாளர் வேலு அனுப்பியுள்ள கடிதம்:
மாநகராட்சி மத்திய மண்டலம் வி.வி.சி.லே-அவுட்டில், 40 அடி அகல பொதுச் சாலை கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிக்கப்பட்டது. அதை பயன்படுத்தி வந்த அருகே காமராஜபுரத்தில் வசிக்கும் நுாற்றுக்கணக்கான பட்டியல் வகுப்பை சேர்ந்த குடும்பங்கள், அப்பகுதி மக்கள் அதை மீட்க கடுமையாக போராடி வந்தனர்.
சட்டப் போராட்டத்தின் விளைவாக அந்த ஆக்கிரமிப்பை துரித கதியில் அகற்ற கடந்த மார்ச், 28ம் தேதி ஐகோர்ட் உத்தரவிட்டது. கடந்த, 1ம் தேதி மாநகராட்சி கமிஷனர் உத்தரவின்படி, உதவி கமிஷனர் தலைமையில் ஆக்கிரமிப்பை அகற்ற அமைக்கப்பட்ட குழு நடவடிக்கையை தொடங்க தயாராக இருந்தது.
ஆனால், கடைசி நிமிடத்தில் காரணமின்றி கைவிடப்பட்டது. மாநகராட்சி கமிஷனரிடம் ஐகோர்ட் உத்தரவை உடனே அமல்படுத்த வலியுறுத்தினோம்; எந்த பதிலும் இல்லை. நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு புகார் மனு சமர்ப்பித்தோம்; அவரிடம் இருந்தும் எவ்வித பதிலும் இல்லை.
ஆக்கிரமிப்பில் உள்ள ஓர் அரசு நிலத்தை மீட்க மாநகராட்சி கமிஷனருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது ஒரு பொன்னான வாய்ப்பு. ஆனால், இதுவரை அதை பயன்படுத்தாமல் தவிர்த்து வருவது ஆக்கிரமிப்பாளர்களுடன் ரகசியமாக கூட்டு சேர்ந்து ஊழல் செய்வது நிரூபணமாகிறது.
கடந்த, 35 ஆண்டுகளுக்கும் மேலாக நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு பொதுச் சாலையை ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிப்பது வேண்டுமென்றே கடமை தவறும் செயல். அத்துடன் ஆக்கிரமிப்பாளர்களுடன் ரகசிய கூட்டு சேர்ந்து, ஆக்கிரமிப்பை தக்க வைக்க சதி செய்து, வழக்கமான லஞ்சம் பெறுவது ஒரு கிரிமினல் குற்றம். எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

