/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கன்னார்பாளையம் துவக்க பள்ளிக்கு காமராஜர் விருது
/
கன்னார்பாளையம் துவக்க பள்ளிக்கு காமராஜர் விருது
ADDED : மே 27, 2024 12:23 AM

மேட்டுப்பாளையம்;கன்னார்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு, இந்த கல்வி ஆண்டுக்கான, 'காமராஜர் விருது' வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி கல்வித்துறை சார்பில், சிறப்பாக செயல்படும், அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் துவக்கப் பள்ளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழக அரசு காமராஜர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
அதன்படி 2023--24ம் கல்வி ஆண்டுக்கான, சிறந்த துவக்கப் பள்ளிக்கான காமராஜர் விருது, காரமடை அருகே உள்ள கன்னார்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு வழங்க, மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து உள்ளது. இப்பள்ளியில், 205 சிறுவர், சிறுமியர் படிக்கின்றனர்.
இதற்கான விருது வழங்கும் நிகழ்வு, கோவை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடந்தது.
சிறந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியாக தேர்வு பெற்ற, கன்னார்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு, 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா பெற்றுக் கொண்டார்.
அப்போது மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் புனித அந்தோணிம்மாள் உடனிருந்தார்.

