/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயற்கையுடன் இணைந்த 'கொட்டுக்காளி' ஒளிப்பதிவாளர்
/
இயற்கையுடன் இணைந்த 'கொட்டுக்காளி' ஒளிப்பதிவாளர்
ADDED : செப் 15, 2024 01:41 AM

கொட்டுக்காளி திரைப்படம் கடந்த, 23ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. திரைக்கு வரும் முன்னே பல விருதுகளை குவித்த இந்த படம் பெர்லின் பெஸ்டிவலில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படமாகும். இந்த படத்திற்கு மேலும் உயிரூட்டிய ஒளிப்பதிவாளர் சக்திவேலுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. திருப்பூரை சேர்ந்த சக்திவேல் அந்த படத்தின் அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்தார்.
எனது முதல்படமான கொட்டுக்காளி சாதனை படமாக அமைந்தது மகிழ்ச்சியாக உள்ளது.
திரை உலக ஜாம்பவான்களான கமலஹாசன், இயக்குனர் பாலா, ஒளிப்பதிவாளர் பி.சி., ஸ்ரீராம் உட்பட பலர் என்னை பாராட்டியது மறக்க முடியாது. கடந்த, 6ம் தேதி நடைபெற்ற எனது திருமணத்திற்கு கிடைத்த பரிசுகளாக அதை ஏற்று கொள்கிறேன். படத்தை, 30 நாட்களில் எடுத்து முடித்தோம். டப்பிங் இல்லாமல் லைவ் சவுண்டில் எடுக்கப்பட்ட படம். தமிழில் சில படங்களே அவ்வாறு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இயற்கை எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. அதற்கு இயற்கைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
ஒரு நாளில் நடக்கும் சம்பவத்தை, 30 நாட்கள் எடுத்தோம். 30 நாட்களும் காட்சிகள் மாறாமல் ஒரே மாதிரியான வெளிச்சத்தை திரையில் கொண்டு வந்தேன். படத்தில் சேவல் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும், நடிகர்களிடம் சொல்லி ஒளிப்பதிவு செய்யலாம். ஆனால் சேவல் சொல்லாமல் ஒத்துழைப்பு கொடுத்தது. அதேபோல ஒரு காட்சியில் மட்டும் வந்த காளை மாடும் சிறப்பாக ஒத்துழைத்தது. காளை சீறும் காட்சி எதேச்சையாக அமைந்தது. நாங்கள் எதிர்பார்க்காமல் அமைந்த அந்த காட்சி திரையரங்கில் ரசிகர்களிடையே மிகவும் பேசப்பட்டது.
படத்தில், 13 நடிகர்களில், சூரி, அன்னா பென் உட்பட 4 பேர் மட்டுமே அனுபவம் வாய்ந்த நடிகர்கள். மற்றவர்கள் அனைவரும் இயக்குனர்களின் உறவினர்கள், புதுமுகம். படம் எடுக்கும் முன் பல முறை ஒத்திகை பார்த்து எடுக்கப்பட்டது. இன்டர்வல் பிளாக் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது. அந்த சண்டை காட்சியை மிகவும் சிரமப்பட்டு எடுத்தோம்.
அதேபோல படத்தின், 80 சதவீதம் பயணம் தான் கதை. லைவ் சவுண்டு என்பதால் பயணத்தில் வசனங்கள் தெளிவாக பதிவாக வேண்டும் என்பதற்காக ஆட்டோவில் நான் இதற்கென பிரத்யேக கேமிரா பொருத்தி வடிவமைத்தேன்.
நடிகர் சூரி இப்படத்தில் தனது குரலை மாற்றி பேசுவார். டாக்டர்கள் இந்த முயற்சியை எடுக்க வேண்டாம் என கூறியும் ஈடுபாட்டுடன் நடித்தார். இந்த படத்தை தயாரித்த நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் வினோத்ராஜ், நடிகர் சூரி மற்றும் படத்தை வெற்றி பெற செய்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.