/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா
/
கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED : ஆக 28, 2024 02:22 AM

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி, கோமாதா பூஜை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, விஸ்வரூப தரிசனம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன், மஹா கணபதி கோவிலில், 108 கோ பூஜை விழா நடந்தது. தொடர்ந்து, மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. பழனிக்கவுண்டன்புதுார் விஷ்ணு பஜனை கோவில் குழுவினரின், திருப்பல்லாண்டு, திருப்பாவை பாராயணம் நிகழ்ச்சி நடந்தது. உறியடி நிகழ்ச்சி நடந்தது.
ஹரிகந்த ஸ்ருதி குழுவினரின் பஜனை நடைபெற்றது. சாயரட்சை மஹா தீபாராதனை, அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கண்ணன், ராதை வேடம் அணிந்து வந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நெகமம், காட்டம்பட்டிபுதூரில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில், 26ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதில், கண்ணன் பிறப்பு உற்சவம் நடந்தது. தொடர்ந்து ஊஞ்சல் வைபவம் நடந்தது. நேற்று, 27ம் தேதி, மாலையில், பஜனை பாடல்கள் பாடப்பட்டது. தொடர்ந்து உரியடிக்கும் நிகழ்சிகள் நடந்தது. பின் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நிகழ்சிகள் நடந்தது. பக்தர்களுக்கு பிராசதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாண உற்சவம்
உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நேற்று கிருஷ்ணன், ருக்மணி சுவாமிகளின் திருகல்யாண உற்சவம், பெண் அழைத்தல், மாப்பிள்ளை அழைத்தல், சீர்வரிசை வழங்குதல் உள்ளிட்ட திருமண சடங்குகளுடன் துவங்கியது.
மதியம், 1:00 மணிக்கு கிருஷ்ணன், ருக்மணி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 'ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' கோஷத்துடன் பக்தர்கள் வழிபட்டனர். சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, நாராயணீயம் பாராயண உற்சவம் நடந்தது.