ADDED : ஜூலை 09, 2026 08:40 PM
கோவை: கலெக்டர் அலுவலகத்தில், ஊதியம், தொழில் உறவுகள், சமூக பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணிச்சூழல் சட்ட தொகுப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
புதிய தொழிலாளர் சட்டங்களின்படி, ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதற்காக ஒப்பந்ததாரர்களிடமிருந்து ஊதிய பட்டியலை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஊதிய பட்டியல் பெறுவதிலோ அல்லது ஊதியம் வழங்குவதிலோ தாமதம் ஏற்பட்டால், அதற்கு நிறுவன உரிமையாளர்களே பொறுப்பேற்க நேரிடும்.
மேலும், மகப்பேறு காலத்தில் பெண் தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்குவதோ, வழங்கப்பட வேண்டிய ஊதியம் மற்றும் மகப்பேறு பலன்களை மறுப்பதோ கடுமையான குற்றமாக கருதப்படும் என விளக்கப்பட்டது.
தொழிலாளர் சட்டங்களை எளிதாக கடைப்பிடிக்கும் வகையில் அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘ஒற்றைச் சாளர முறை’ மூலம் உரிமம் பெறுதல், ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தல், நிறுவன விவரங்களில் மாற்றம் செய்தல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒரே இணையதளம் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.
மாவட்ட வருவாய் அலுவலர் மதுராந்தகி, மத்திய தொழிலாளர் அமலாக்க அலுவலர் ரமேஷ் குமார், கோவை மண்டல கனரா வங்கி பொது மேலாளர் ஷைலஜா, துணைத் தலைமை தொழிலாளர் நல ஆணையர் ஸ்ரீனு தாரா பங்கேற்றனர்.
