/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் ஒப்படைப்பு
/
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் ஒப்படைப்பு
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் ஒப்படைப்பு
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் ஒப்படைப்பு
UPDATED : ஆக 25, 2024 03:30 AM
ADDED : ஆக 25, 2024 01:25 AM

கோவை;கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு, இதுவரை கையகப்படுத்தியுள்ள, 472.32 ஏக்கர் நிலத்தை, இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு, 99 ஆண்டு குத்தகைக்கு நிபந்தனையின்றி வழங்குவதற்கான கடிதத்தை, மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது. 2010ல் இருந்து இழுபறியாக இருந்த இப்பிரச்னைக்கு, 14 ஆண்டுகளுக்கு பின் முடிவு கிடைத்திருக்கிறது.
கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான நிலம் கையகப்படுத்த, 2010ல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில், அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பின், இத்திட்ட பணிகள் மெல்ல மெல்ல நகர்ந்தன. கையகப்படுத்தும் நிலத்தை, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க, தமிழக அரசு நிபந்தனைகள் விதித்ததால், முட்டுக்கட்டை ஏற்பட்டது.
சமீபத்தில் கோவை வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக பேசினார். உடனடியாக, எம்.பி., ராஜ்குமார் தலைமையில் கள ஆய்வு செய்து, முதல்வருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின், எவ்வித நிபந்தனையுமின்றி,99 ஆண்டு குத்தகைக்கு நிலத்தை இலவசமாக வழங்க ஒப்புதல் வழங்கி, ஆக., 16ல் ஆணையத்துக்குகடிதம் அனுப்பினார். அதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தில் இருந்து விமான நிலைய இயக்குனருக்கு, நிலம் மாற்றம் செய்து வழங்கும் கடிதம் வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக விளக்கும் கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில், எம்.பி., ராஜ்குமார் தலைமையில் நேற்று நடந்தது.
அப்போது, கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு, சிங்காநல்லுார், உப்பிலிபாளையம், காளப்பட்டி கிழக்கு, மேற்கு, நீலாம்பூர் மற்றும் இருகூர் கிராமங்களில் இருந்து மொத்தம், 634.82 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும். இதில், 468.83 ஏக்கர் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம். 134.75 பிற துறைகளுக்கு சொந்தமானவை. 29.37 ஏக்கர் அரசு புறம்போக்கு.
விமான நிலைய வளர்ச்சி திட்டங்களுக்காக, எவ்வித நிபந்தனையும் இன்றி, 99 ஆண்டு குத்தகைக்கு, தமிழக அரசு கையகப்படுத்திய நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை, இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு ஒப்படைக்க, தமிழக அரசு முடிவெடுத்தது.
நிலம் ஒப்படைக்க முடிவு
முதல் கட்டமாக, கையகப்படுத்திய, 451.74 ஏக்கர் நிலம், 20.58 ஏக்கர் புறம்போக்கு நிலம் சேர்த்து, 472.32 ஏக்கர் நிலம் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது; அதற்கான கடிதம், விமான நிலைய இயக்குனரிடம் வழங்கப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்தியதற்காக, இதுவரை, 1,848 கோடி ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறது. 8 ஏக்கர் கையகப்படுத்துவது தொடர்பாக, ஐகோர்ட்டில் வழக்கு நடக்கிறது. 3 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கிறது; இம்மாத இறுதிக்குள் கையகப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோர்ட் விசாரணையில் உள்ள நிலம் தொடர்பாக, தீர்ப்புக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
நிலம் பரிமாற்றம்
ராணுவத்துக்கு சொந்தமான, 134.32 ஏக்கர் நிலத்தில் பணிகள் செய்து கொள்ள முன்அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. விரைவில் ராணுவத்துறைக்கும், தமிழக அரசுக்கும் இடையே நிலம் பரிமாற்றத்துக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். நிலத்தை பெற்ற பின், நிர்வாக ரீதியாக ஆணையத்துக்கு மாற்றிக் கொடுக்கப்படும்.
இவ்வாறு, கலெக்டர் கூறினார்.
நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.