/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவை துவக்கம்
/
நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவை துவக்கம்
ADDED : ஆக 30, 2024 10:10 PM

கோவை:கோவை மாவட்டத்தில், 5 ஒன்றியங்களுக்கு நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவை துவக்கப்பட்டுள்ளது.
தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், 245 நடமாடும் கால்நடை மருத்துவ சேவை வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இதில், கோவை மாவட்டத்தில் அன்னூர், காரமடை, சுல்தான்பேட்டை, தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய 6 ஒன்றியங்களுக்கு தலா ஒரு வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில், முதல்கட்டமாக 5 வாகனங்களை எம்.பி., ராஜ்குமார் துவக்கி வைத்தார். கலெக்டர் கிராந்திகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சைகள், செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, நோய் தடுப்பு மர்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மற்றும் கோழிகளுக்கு இலவச சிகிச்சைகள் இந்த வாகனங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும்.
அன்னுார் கால்நடை மருத்துவமனை, காரமடை கால்நடை மருந்தகம், சுல்தான்பேட்டை கால்நடை மருத்துவமனை, பேரூர் கால்நடை மருத்துவமனை, வேட்டைக்காரன்புதுார் கால்நடை மருத்துவமனை, வடசித்துார் கால்நடை மருந்தகம் ஆகியவற்றைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த வாகனங்கள் சேவையாற்றும்.
இந்த நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களில், தலா 1 டாக்டர், ஒரு உதவியாளர், ஒரு டிரைவர் பணியமர்த்தப்படுவார். காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் சிகிச்சை மற்றும் கருவூட்டல் பணிகளை மேற்கொள்ளும். மதியத்துக்குப் பிறகு, 1962 என்ற அவசர உதவி எண்ணில் பெறப்பட்ட அழைப்புகளின் அடிப்படையில் இயங்கும்.