/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுத்தையா, மர்ம விலங்கா! பாலத்துறை மக்கள் பீதி
/
சிறுத்தையா, மர்ம விலங்கா! பாலத்துறை மக்கள் பீதி
ADDED : மார் 06, 2025 10:19 PM
போத்தனுார்; கோவை, திருமலையாம்பாளையம் பகுதியில் உலா வரும் சிறுத்தையால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கடந்த மாதம் சிறுத்தை ஒன்று செட்டி பாளையம் சாலையிலுள்ள பெரிய ரேடியோ ஸ்டேஷன், மலுமிச்சம்பட்டியிலுள்ள தனியார் பள்ளி, கல்லூரி அருகிலும் தென்பட்டது.
வனத்துறையினர் தேடுதலில் சிக்கவில்லை. தற்போது இச்சிறுத்தை ஒத்தக்கால்மண்டபம் -- வேலந்தாவளம் சாலையில் திருமலையாம்பாளையம், பாலத்துறை சந்திப்பு பகுதியில் இரவு நேரத்தில் உலா வருகிறது.
தகவலறிந்த வனத்துறையினர் கூண்டு வைத்தும் பலனில்லை. இதனிடையே கருஞ்சாமிகவுண்டம்பாளையத்தில் உள்ள கிரஷர் ஒன்றில் வளர்க்கப்பட்டு வந்த நாய் ஒன்றை கவ்விச் சென்றது.
தொடர்ந்து சின்னாம்பதியில் சண்முகம் என்பவரது மாட்டை கடித்து கொல்ல முயன்றுள்ளது. மாட்டின் சத்தம் கேட்டு சண்முகம் வெளியே வந்த போது, சிறுத்தை அங்கிருந்து ஓடிவிட்டது.
வனத்துறைக்கு இச்சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களோ சிறுத்தை வரவில்லை. மர்ம விலங்குதான் இதனை செய்துள்ளது என்று கூறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது சிறுத்தை உலா வரும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மேலும் அதனுடன் ஒத்தக்கால் மண்டபம் - வேலந்தாவளம் சாலை, திருமலையாம்பாளையம். பாலத்துறை சாலைகளில் இரவு நேரத்தில் யாரும் தனியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்த ஒலிப்பதிவும் வைரலாவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். உயிரிழப்பு ஏற்படும் முன் சிறுத்தையை வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.