/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்க உறுதி ஏற்போம்! அன்பால் அவர்களை அரவணைப்போம்
/
குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்க உறுதி ஏற்போம்! அன்பால் அவர்களை அரவணைப்போம்
குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்க உறுதி ஏற்போம்! அன்பால் அவர்களை அரவணைப்போம்
குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்க உறுதி ஏற்போம்! அன்பால் அவர்களை அரவணைப்போம்
ADDED : ஆக 23, 2024 06:25 AM

பெ.நா.பாளையம் : நாட்டின் பல்வேறு இடங்களில் குழந்தைகள் மீது பாலியல் ரீதியான அத்துமீறல்கள் தொடர்ந்து நடப்பதால், அத்துன்பத்தில் இருந்து, அவர்களை காப்பாற்றி, அரவணைத்து செல்வது நம் அனைவரின் கடமை என்ற கருத்து வலுத்து வருகிறது.
குழந்தைகளுக்கு தீங்கிழைத்தல் என்பது குழந்தைகளுக்கு எதிராக உடல், மன, பாலியல், உணர்வு ரீதியாக நடத்தப்படும் வன்முறைகள் ஆகும். உரிமைகள் மீறல், புறக்கணிப்பு போன்ற நிகழ்வுகளும் தீங்கிழைத்தல் பட்டியலில் சேரும். தீக்காயம் ஏற்படுத்துதல், உதைத்தல், குத்துதல், தாக்குதல் போன்ற நிகழ்வுகள் வாயிலாக, குழந்தைகளுக்கு தீங்கிழைத்தல் அனைத்தும் உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
குழந்தைகளை தவறாக பாலியல் ரீதியாக பயன்படுத்தும் நபர்கள் 'போக்சோ' சட்டத்தில் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர். குழந்தைகளின் அடிப்படை தேவைகளை மறுத்தல் கூட தீங்கிழைத்தல் ஆகும். அதாவது, உணவு, உடை மற்றும் சுகாதாரம், கல்வி தேவைகள், அன்பு, கவனிப்பு இல்லாமையும் ஆகியவை குழந்தைகளுக்கான தீங்கிழைத்தல் பட்டியலில் சேரும். மன அதிர்ச்சியை ஏற்படுத்தும் செயல்கள், தோல்விகள் குறித்து திட்டுதல், தண்டனை கொடுத்தல், ஒப்பிட்டு பேசுதல், சிறுமைப்படுத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் குழந்தைகளுக்கு உணர்வு பூர்வமான பாதிப்பை ஏற்படுத்தும். பெற்றோர், தங்கள் குழந்தைகளின் முன்னிலையில் தவறான தீய வார்த்தைகளை பயன்படுத்துதல், சண்டை போட்டுக் கொள்ளுதல், அடித்தல் போன்ற நிகழ்வுகள் போது உளரீதியான பாதிப்புக்கு குழந்தைகள் உள்ளாகின்றனர்.
தீய பழக்கங்கள்
போதிய இடவசதி இல்லாத குடும்பங்களில், பெற்றோர் குடும்ப பிரச்னைகளை குழந்தைகள் முன் பேசும் போது, அவர்களின் கல்வியில் பின்னடைவு ஏற்படுகிறது. குடும்பத்தில் அன்பு கிடைக்காத குழந்தைகள், அது பிறரிடம் தேடும்போது தீய பழக்கங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
மேலும், அவர்களை தவறான காரியங்களில் ஈடுபடுத்தவும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
குடும்பங்களில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கிடைக்கப்பெறாத குழந்தைகள், வீட்டை விட்டு ஓடுதல், தெருவோரங்களில் வாழ்தல் உள்ளிட்ட துரதிர்ஷ்டமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
மாற்றுத்திறன் படைத்த குழந்தைகள் புறக்கணிக்கப்படுதல், ஆசிரியர்கள், குழந்தைகளை வகுப்பறையில் தண்டிப்பதும், மற்ற மாணவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதும் மற்றும் விரும்பத்தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதும், குழந்தைகளை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்படைய செய்கிறது.
அன்பு ஒன்றே தீர்வு
குழந்தைகள் தோல்வி அடையும்போது, அவர்களை திட்டுதல் அல்லது தண்டனை கொடுப்பதை தவிர்த்து, அவர்களை ஊக்குவித்தல் வேண்டும். அன்பு ஒன்றே அவர்களுக்கு தீர்வு.
குழந்தைகளுடன் அமர்ந்து அன்றாட நிகழ்வுகளை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். தங்களுடைய குழந்தைகளுக்கு தீங்கிழைக்கப்பட்ட விபரங்கள் அறிந்து பின் உடனடியாக அதை சரி செய்ய ஆற்றுப்படுத்துதல், உளவியல் நிபுணர்கள் வாயிலாக ஆற்றுப்படுத்துதல் வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு தீங்கிழைக்கப்படுவதை தவிர்க்க அல்லது அவர்களை பாதுகாக்க, 1098 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்கலாம்.