/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒன்றரை வயது குழந்தைக்கு கல்லீரல் மாற்று ஆபரேஷன்
/
ஒன்றரை வயது குழந்தைக்கு கல்லீரல் மாற்று ஆபரேஷன்
ADDED : ஏப் 23, 2024 10:34 PM

கோவை : கல்லீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு, தானமாக பெறப்பட்ட கல்லீரலை வெற்றிகரமாக பொருத்திய, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை டாக்டர்களுக்கு, பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த, தம்பதியின் ஒன்றரை வயது மகனுக்கு, 'பைலரி அட்ரேசியா' எனும், பிறவியிலேயே கல்லீரலில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த் பரதன் கூறியதாவது:
ஆறு மாதக் குழந்தையாக இருந்த போது, பிரச்னை கண்டறியப்பட்டது. ஒன்றரை வயதில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள, மருத்துவ காரணங்களால் பெற்றோரிடமிருந்து கல்லீரலை தானமாக பெற முடியவில்லை. மூளைச்சாவு அடைந்த ஒரு முதியவரின் கல்லீரல் தானமாக பெறப்பட்டது. கல்லீரலின் ஒரு பகுதி குழந்தைக்கு பொருத்தப்பட்டது. இதற்கான அறுவை சிகிச்சை, 14 மணி நேரம் நடந்தது. தற்போது குழந்தை குணமடைந்து நல்ல உடல்நலத்துடன் உள்ளான்.
இவ்வாறு, அவர் கூறினார்.
அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட, மருத்துவ குழுவினரை எஸ்.என்.ஆர். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசாமி, உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

