/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்டில் குப்பை இருக்கு பாருங்க! 'வாக்கி டாக்கி'யில் கமிஷனர் 'அலர்ட்'
/
பஸ் ஸ்டாண்டில் குப்பை இருக்கு பாருங்க! 'வாக்கி டாக்கி'யில் கமிஷனர் 'அலர்ட்'
பஸ் ஸ்டாண்டில் குப்பை இருக்கு பாருங்க! 'வாக்கி டாக்கி'யில் கமிஷனர் 'அலர்ட்'
பஸ் ஸ்டாண்டில் குப்பை இருக்கு பாருங்க! 'வாக்கி டாக்கி'யில் கமிஷனர் 'அலர்ட்'
ADDED : ஆக 24, 2024 01:49 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சியில், குடிநீர், சுகாதாரம் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், அதிகாரிகளுக்கு 'வாக்கி டாக்கி' வழங்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சியில், ஆங்காங்கே குப்பை உள்ளிட்ட கழிவுகள், மூட்டை, மூட்டையாக குவிந்து கிடக்கிறது.தெருவிளக்குகள் எரிவதில்லை; குடிநீர் குழாய் உடைப்பு, பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றம் என அடுக்கடுக்கான புகார்கள் உள்ளன.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கூறி அவர்கள், அந்த ஊழியர்களுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும், ஒரு சில நேரங்களில், தகவல் பரிமாற்றம் இல்லாமல், பிரச்னைக்கு தீர்வு எட்டப்படாமல் உள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில், அதிகாரிகளுக்கு, 'வாக்கி டாக்கி' வழங்கப்பட்டுள்ளன. கமிஷனர், புகார்கள் குறித்து உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு சம்பவ இடத்தில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளதா என்றும், அதிகாரிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பணியில் உள்ளனரா என, கண்காணிப்பு செய்து அறிவுரை வழங்கினார்.
நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:
நகராட்சியில், குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரச்னைகள் குறித்து தகவல் வந்தால் உடனடியாக அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தகவல் தெரியவில்லை என்ற காரணத்தை கூறாமல் இருக்கவும், உடனடியாக தீர்வு காணும் வகையில், சுகாதாரத்துறை, குடிநீர், தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் பாதாள சாக்கடை திட்ட சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு, 'வாக்கி டாக்கி' வழங்கப்படுகிறது.
முதற்கட்டமாக, 15 வாக்கி டாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. தினமும், அவர்களை தொடர்பு கொண்டு குறைகளை சரிசெய்வது குறித்த தகவல்களை பரிமாற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மொபைல்போனை விட, இதை உடனடியாக அவர்களை தொடர்பு கொள்ள எளிதாக உள்ளது. இதில், போட்டோ, லொக்கேஷன், மெசேஜ் செய்தல் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. தற்போது, அதிகாரிகளுக்கு இதன் பயன்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 வாக்கி டாக்கி வாங்கப்பட உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

