ADDED : ஜூன் 24, 2026 04:31 PM
l உள்வட்ட அளவில் ஜமாபந்தி நடந்த l பொதுமக்களின் சிரமம் குறையும்
சூலுார்: ‘‘மக்கள் சிரமம் தவிர்க்க, ஒவ்வொரு தாலுகாவிலும் உள் வட்ட அளவில் ஜமாபந்தி நடந்த வேண்டும்’ என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம், தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நடத்தப்படுகிறது. கலெக்டரால் நியமிக்கப்படும் ஜமாபந்தி அதிகாரி, கிராம அளவில் வருவாய் கணக்குகள் தணிக்கை செய்தல், பதிவேடுகள், ஆவணங்கள் சரிபார்த்து ஒப்புதல் அளிப்பார். மக்களிடம் மனுக்கள் பெற்று, அதற்குரிய சான்றுகளையும் வழங்கும் பணியையும் மேற்கொள்வது வழக்கம்.
நடப்பாண்டுக்கான ஜமாபந்தி தாலுகா அலுவலகங்களில் நடந்து வருகின்றன. சூலுார் தாலுகாவில், இதுவரை நான்கு உள்வட்ட வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி முடிந்துள்ளது. நேற்றுமுன்தினம் வாரப்பட்டி உள்வட்டத்துக்கான ஜமாபந்தி நடந்தது. 800க்கும் மேற்பட்ட மக்கள் மனுக்களுடன் திரண்டனர். மனுக்களை பதிவு செய்து, டோக்கன் வழங்க முடியாமல் வருவாய் துறையினர் திணறினர். மதியம் 1:30 மணியளவிலும், ஏராளமானோர் மனுக்களை கொடுக்க காத்திருந்தனர். ஜமாபந்தி அலுவலரிடம் மனு அளிக்க இருந்த மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சூலுார் தாலுகாவில், கருமத்தம்பட்டி, சூலுார், இருகூர், செலக்கரச்சல், வாரப்பட்டி உட்பட ஐந்து உள்வட்டங்கள் உள்ளன. இதில், வாரப்பட்டி உள்வட்ட கிராமங்கள், சூலுாரில் இருந்து பல கி.மீ., தொலைவில் உள்ளது. இதனால், ஜமாபந்தி நடக்கும் போது, மக்கள் வந்து செல்ல அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
வாரப்பட்டி உள்வட்டத்தில் கடைசி கிராமத்தில் இருந்து சூலுார், 45 முதல், 50 கி.மீ., தூரம் உள்ளது. அங்கிருந்து, சூலுாருக்கு முறையான பஸ் வசதிகள் கூட இல்லை. மனுக்கள் கொடுக்க, பல பஸ்கள் மாறி வந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், முதியவர்கள், கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் சிரமப்படுகின்றனர்.
இதேபோல், கிராம நிர்வாக அலுவலர் அலுவலக உதவியாளர்கள், அனைத்து ஆவணங்கள், பதிவேடுகளையும் மூட்டை கட்டி கொண்டு வரவேண்டிய நிலை உள்ளது. அதனால், தொலைவில் உள்ள உள் வட்டங்களிலேயே ஜமாபந்தி நடத்தி, அதிகாரிகள் மனுக்களை பெற்றால், பொதுமக்களின் சிரமம் குறையும். ஆங்கிலேயர் கால நடைமுறையை இன்னும் பின்பற்றப்படுகிறது. அதை சிறிது மாற்றி அமைத்து, மக்களின் சிரமம் குறைக்க அரசு முன்வரவேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
