/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
64 திருவிளையாடல்களை சொல்லும் மீனாட்சி அம்மன் கோவில் தேர்கள்
/
64 திருவிளையாடல்களை சொல்லும் மீனாட்சி அம்மன் கோவில் தேர்கள்
64 திருவிளையாடல்களை சொல்லும் மீனாட்சி அம்மன் கோவில் தேர்கள்
64 திருவிளையாடல்களை சொல்லும் மீனாட்சி அம்மன் கோவில் தேர்கள்
ADDED : ஏப் 21, 2024 03:39 AM

மதுரை: மதுரை சித்திரைத்திருவிழாவில் முக்கிய நிகழ்வாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று(ஏப்.,21) நடக்கிறது. நாளை மாசி வீதிகளில் 64 திருவிளையாடல்கள், அம்மன், சுவாமி எழுந்தருளும் வாகனங்களை குறிக்கும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய திருத்தேர்கள் வலம் வருகின்றன.
மீனாட்சி கோவில் சித்திரைத்திருவிழா ஏப்.,12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்.,19ல் பட்டாபிேஷகமும், நேற்று திக்குவிஜயமும் நடந்தது. நாளை தேரோட்டம் நடக்கிறது. கோவிலின் இரண்டு தேர்களிலும் 64 திருவிளையாடல்கள் ஒவ்வொரு வகையிலும் சிற்ப வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. அம்மனின் சிறுவயது முதல் நடந்த விஷயங்கள், பட்டாபிஷேகம், திக்குவிஜயம், சுவாமி, அம்மன் திருக்கல்யாணம் இதில் நுணுக்கமாக இடம் பெற்றுள்ளன.
சித்திரை திருவிழாக்களில் அம்மன் வலம் வரும் ரிஷப, கற்பக விருட்சகம் உள்ளிட்ட வாகனங்களும், விநாயகர் முதல் சுப்பிரமணியர் வரை அனைத்து தெய்வங்களும் வரிசையாக இதில் சிலையாக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இத்தேர்கள் வடிவமைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தலைமை பட்டர் ஹாலாசநாதர் கூறியதாவது: பட்டாபிேஷகத்தை தொடர்ந்து எந்த ஒரு ராஜாவோ ராணியோ பட்டாபிஷேகம் முடிந்தபின் திக்குவிஜயம் செய்ய வேண்டும். அதாவது அம்பாள் எட்டு திக்கில் இருக்கும் இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரை வெல்ல புறப்படுவார். அவர்களை வெற்றி கொண்டபின் கைலாயம் சென்று நந்திகேஸ்வரரை சந்திக்கிறார். அவர் சுவாமியிடம் தெரிவிப்பதற்குள் சுவாமியே நேரில் வந்து விடுகிறார்.
அம்பாள் இயற்கையாகவே மூன்று மார்புகளோடு பிறந்தவள். அதனால் வருந்திய பாண்டிய மன்னனிடம் அசரீரி கூறுகையில், ''ஒரு பையனுக்கு என்னென்ன சடங்குகள் செய்வாயோ அது அனைத்தையும் அம்பாளுக்கு செய்ய வேண்டும். பருவம் எய்தியபின் இவளது கணவனை இவள் பார்க்கும்பொழுது இவளுக்குண்டான பெண் குணம் வந்துவிடும் என கூறியது. அதன்படி திக்குவிஜயத்தில் அம்மன் சுவாமியை கண்டவுடன் மூன்றாவது மார்பகம் மறைந்து கையில் உள்ள ஆயுதங்களை விடுத்து வெட்கத்துடன் முகம் சிவந்து காணப்படுகிறாள். அதை கண்ட சுவாமி, நாளை உன்னை மதுரையில் வந்து திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி அனுப்பினார். அதன்படியே திக்குவிஜயம் முடிந்து இன்று திருக்கல்யாணம் நடக்க உள்ளது.
திக்குவிஜயத்தில் ஆண் குழந்தைகள்
திக்குவிஜயத்தில் சுவாமியாகவும், அம்மனாகவும் இரு ஆண் பிள்ளைகள் வலம் வருவர். பெண் குழந்தைகள் திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டிற்கு செல்லக்கூடியவர்கள். ஆண் பிள்ளைகள் தான் இங்கேயே இருப்பார்கள். அதனாலேயே ஆண் பிள்ளைகளை பெண் வேடமிட்டு சுவாமி லீலைகளில் ஈடுபடுத்துகிறோம். சித்திரை திருவிழா தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே இது நடந்து வருகிறது.
ஐந்து முதல் பத்து வயதுக்குள் சிறுவர்களை தேர்வு செய்கிறோம். இக்கோயிலில் பூஜை செய்பவர்களான விக்ரபாண்டிய வகையறா பட்டர்களின் குழந்தைகள் பெண் வேடமிட்டும், குலசேகர வகையறா பட்டர்களின் குழந்தைகள் ஆண் வேடமிட்டும் லீலைகளில் பங்கேற்று வருகின்றனர் என்றார்.

