/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒளிராத மின்விளக்குகளால் வாகன ஓட்டுநர்கள் அவதி
/
ஒளிராத மின்விளக்குகளால் வாகன ஓட்டுநர்கள் அவதி
ADDED : ஜூலை 09, 2024 12:27 AM
கிணத்துக்கடவு:பொள்ளாச்சி - கோவை ரோட்டில், தாமரைக்குளம் பகுதியில் அதிகாலை நேரத்தில் மின்விளக்கு ஒளிராததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், வாகனங்கள் அதிக வேகமாக செல்வதால் விபத்து நடப்பது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக, ரோட்டை கடக்கும் மக்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில், நகரின் முக்கிய பகுதியில் விபத்தை தடுக்க, ரோட்டின் நடுவே மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், கோவில்பாளையம், தாமரைக்குளம், கிணத்துக்கடவு பகுதியில் இரவு முதல், காலை வரை மின் விளக்குகள் ஒளிர்ந்த படி இருக்கும். இதனால், மக்கள் பலர் எளிதாக ரோட்டை கடந்து சென்று வந்தனர்.
ஆனால், கடந்த சில நாட்களாக, தேசிய நெடுஞ்சாலையில் தாமரைக்குளம் பகுதியில் அதிகாலை நேரத்தில் இந்த மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால், அப்பகுதி மக்கள் ரோட்டை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
மேலும், ரோட்டில் வரும் வாகனங்கள் சரிவர தெரியாமல் சிலர் தடுமாறி செல்கின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின் விளக்குகளை, காலை, 6:00 மணி வரை எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.