/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் பல் அடுக்கு பயிர் திட்டம்: வேளாண் மாணவியர் விளக்கம்
/
தென்னையில் பல் அடுக்கு பயிர் திட்டம்: வேளாண் மாணவியர் விளக்கம்
தென்னையில் பல் அடுக்கு பயிர் திட்டம்: வேளாண் மாணவியர் விளக்கம்
தென்னையில் பல் அடுக்கு பயிர் திட்டம்: வேளாண் மாணவியர் விளக்கம்
ADDED : மே 06, 2024 10:37 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, தென்னையில் பல் அடுக்கு பயிர் திட்டம் குறித்து, மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர்கள், கிராம தங்கல் திட்ட மாணவியர் தென்னையில் பல் அடுக்கு பயிர் சாகுபடி குறித்து விளக்கம் அளித்தனர்.
மாணவியர் கூறியதாவது:
தென்னை மரங்களுக்கு இடையில், 7.5 மீ., இடைவெளியில் உள்ளது. தென்னை மரத்தில், அடுக்கடுக்காக வட்டமாக அமைந்திருக்கும் நீண்ட ஓலைகளின் இலைப்பரப்பின் மேல், சூரிய ஒளி முழுமையான அளவில், கிடைக்கும்படி ஓலைகள் உள்ளன. எனவே, சூரியஒளி அடிப்படையில், தென்னையின் இலைப்பரப்பை முதல் அடுக்கு என அழைக்கலாம்.
மர நிழலில் வளரும் தன்மை பெற்ற பயிர்களை அவற்றின் அமைப்பு, உயரம், தேவைப்படும் சூரிய வெளிச்சம் ஆகியவற்றின் அடிப்படையில், இரண்டாம், மூன்றாம், நான்காம் அடுக்குப்பயிர்களாக தேர்வு செய்து, ஊடுபயிர்களாக வளர்க்கப்படுகின்றன.
தென்னை மரத்தின் தண்டைச்சார்ந்து, 12 முதல், 15 அடி உயரம் மட்டும் வளர்ந்த தென்னை ஓலைகளில் ஊடுருவிப்பாயும், சிறிய அளவு சூரிய வெளிச்சத்தையும் பயன்படுத்தி, நன்றாக வளர்ந்து காய்க்கும் திறன் பெற்ற குறுமிளகு, வெற்றிலை போன்றவை இரண்டாம் அடுக்கு பயிராகும்.
நான்கு தென்னை மரங்களின் மத்தியில் உள்ள இடைவெளியில், நேராக ஊடுருவி பாய்ந்து கிடைக்கும் குறைந்தளவு சூரிய வெளிச்சத்தையும், தென்னை மரங்களின் இலை இணுக்குகளிடையே சிதறிப்பாய்ந்து கிடைக்கும் வெளிச்சத்தையும் பயன்படுத்தி, எட்டு முதல், 12 அடி உயரம் வரை வளர்ந்து நன்றாக காய்க்கும் தன்மை பெற்ற கோகோ, பழச்செடிகள் மற்றும் இலவங்கப்பட்டை, கிராம்பு போன்றவை, 3ம் அடுக்கு செடிகளாகும்.
தரை மட்டத்தில் இருந்து, 3 அடி உயரம் மட்டும் வளர்ந்து மூன்று அடுக்கு பயிர்களின் இலைகளில் ஊடுருவியும், இலைப்பரப்பில் இருந்து சிதறி கிடைக்கும் மிக குறைந்த வெளிச்சத்தை மட்டும் பயன்படுத்தி செழிப்பாக வளர்ந்து பலன் தரும் அன்னாசிப்பழச்செடி நான்காம் அடுக்கு பயிராகும்.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் ஊடுபயிர்கள், ஒன்றுக்கொன்று உறுதுணையாக நின்று வளர்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதுபோன்று தோப்புகளின் உள்பகுதியில் அதன் தட்பவெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம், மண்ணில் காணப்படும் வெப்பம், ஈரப்பதம் ஆகியவற்றில் விரும்பத்தகும் பல மாறுபாடுகள் ஏற்படுவதை காண முடிகிறது.
மண்ணில் உள்ள பயன் தரும் நுண்ணுயிரிகள் பெருகி வளர்கின்றன. கோகோ போன்ற செடிகளின் உதிர்ந்த இலைகள் தென்னைக்கு சிறந்த உரமாகும். பல அடுக்கு பயிர்கள் வளர்க்கப்படும் தென்னந்தோப்பில் ஊடுபயிர்கள் விளைச்சலும், தேங்காய் விளைச்சலும் பெருமளவில் அதிகரிக்கும்.
தென்னை, வாழை, சிறு கிழங்கு மற்றும் வெண்டை ஆகியவை கிழக்கு பகுதிகளுக்கு ஏற்றவையாகும். வாழை, மிளகு, கோகோ, ஜாதிக்காய் மற்றும் வெனிலா ஆகியவை மேற்கு பகுதிகளில் பயிரிடலாம்.
தேர்வு செய்யப்பட்டு தோப்பில் ஊடுபயிராக வளர்க்கப்படும் செடிகளுக்கும், தென்னை மரங்களுக்கும் தனித்தனியே அவசியமான சத்து பொருட்களை தகுந்த உரங்களின் வாயிலாக வழங்க வேண்டும்.
இதனால், மண்ணில் வளமானது மாறுபடாமல் நீண்ட காலம் வரை பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு, விஞ்ஞான அடிப்படையில் குறைந்த நிலப்பரப்பில் அதிக மகசூலை பெறுவதற்கு ஏற்ற பயிர்களை இணைத்து வளர்க்கப்படும் பல அடுக்கு பயிர் முறையானது சிறந்தது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.