/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆண்டு முழுதும் தென்னைக்கு ஊட்டச்சத்து! தொழில்நுட்ப கருத்தரங்கில் தகவல்
/
ஆண்டு முழுதும் தென்னைக்கு ஊட்டச்சத்து! தொழில்நுட்ப கருத்தரங்கில் தகவல்
ஆண்டு முழுதும் தென்னைக்கு ஊட்டச்சத்து! தொழில்நுட்ப கருத்தரங்கில் தகவல்
ஆண்டு முழுதும் தென்னைக்கு ஊட்டச்சத்து! தொழில்நுட்ப கருத்தரங்கில் தகவல்
ADDED : ஆக 01, 2024 10:29 PM

உடுமலை : 'தென்னையில் காய் பிடிப்பை மேம்படுத்தி, அதிக மகசூல் கிடைக்க வேர் வழியாக டானிக் செலுத்தும் முறையை விவசாயிகள் பின்பற்றலாம்,' என தென்னை சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
உடுமலை திருமூர்த்திநகர் தென்னை வளர்ச்சி வாரிய விதை பண்ணையில், தோட்டக்கலைத்துறை சார்பில், மாவட்ட அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை என்ற தலைப்பில், இந்நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை., இணைப்பு பேராசிரியர் (தென்னை), ராஜமாணிக்கம் பேசியதாவது: பல்லாண்டு பயிரான தென்னை, மாதம் ஒரு ஓலை வீதம் உற்பத்தி செய்ய கூடியதாகும். இதே போல், மாதம் ஒரு பூவையும் உற்பத்தி செய்யும்.
எனவே, ஊட்டச்சத்தானது தென்னை மரத்துக்கு ஆண்டு முழுவதும் தங்கு, தடையில்லாமல் தேவைப்படுகிறது.
ஊட்டச்சத்து தேவை, மண்ணின் வளம், காலநிலை நீர் பாசனம் போன்ற காரணங்களால் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது.
பொதுவான பரிந்துரையாக, காய்க்கும் ஒரு மரத்துக்கு ஆண்டுக்கு, 50 கிலோ மக்கிய தொழு உரம், 1,100 கிராம் யூரியா, சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் தலா இரண்டு கிலோ பரிந்துரைக்கப்படுகிறது. நீர்ப்பாசன வசதி குறைவாக உள்ள இடங்களில், பரிந்துரைக்கப்பட்ட உரத்தின் அளவை மூன்றாக பிரித்து, ஒரு பங்கை பருவமழை துவங்கியவுடன் வைக்கலாம்.
ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கி குறைபாடுகளால் ஏற்படும் குரும்பை உதிர்தல், ஒல்லி காய் உள்ளிட்ட பிரச்னைகளை தவிர்க்க, வேர் வழியாக 'டானிக்' செலுத்தலாம்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை., சார்பில் இந்த டானிக் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆறு மாதத்துக்கு ஒரு முறை வேர் வழியாக டானிக் செலுத்தலாம். காய் பிடிப்பை மேம்படுத்தி, அதிக மகசூல் கிடைக்க இம்முறை உதவுகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து விவசாயிகளுக்கு, வேர் வாடல் நோயை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் கோக்கோகான் நுண்ணுயிர் திரவம் தயாரிக்கும் முறை குறித்து, செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
தென்னை வளர்ச்சி வாரிய உதவி இயக்குனர்(பயிற்சி) ரகோத்தமன், உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கலாமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.