/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆற்றில் குழாய் பதித்து தண்ணீர் திருட்டு: ஆய்வு செய்து அகற்றிய அதிகாரிகள்
/
ஆற்றில் குழாய் பதித்து தண்ணீர் திருட்டு: ஆய்வு செய்து அகற்றிய அதிகாரிகள்
ஆற்றில் குழாய் பதித்து தண்ணீர் திருட்டு: ஆய்வு செய்து அகற்றிய அதிகாரிகள்
ஆற்றில் குழாய் பதித்து தண்ணீர் திருட்டு: ஆய்வு செய்து அகற்றிய அதிகாரிகள்
ADDED : ஏப் 30, 2024 11:28 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ஆழியாறு ஆற்றில், முறைகேடாக தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்பட்ட குழாய்கள் மற்றும் ஆயில் இன்ஜினை அதிகாரிகள் கண்டறிந்து அகற்றினர்.
ஆழியாறு அணையில் இருந்து, தமிழக பாசன கால்வாய்கள் வாயிலாக, 23 ஆயிரம் ஏக்கர் பாசன பகுதிகளுக்கும், கேரள மாநிலத்தில், 20 ஆயிரம் ஏக்கர் பாசன பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.
அதேபோல, ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரில், மணக்கடவு பகுதியில், கேரள மாநிலத்துக்கு ஒப்பந்தப்படி நீர் அளவீடு செய்து வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக, ஆற்றை ஒட்டிய கிராமங்களுக்கு குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆழியாறு ஆறு மற்றும் பாசன கால்வாய்களில் இருந்து, சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீர்வளத்துறை எச்சரித்தும் வருகிறது.
இதற்காக, தமிழக, கேரளா பகுதிகளில், நீர்வளத்துறை, வருவாய், மின்வாரியம் மற்றும் போலீசார் இணைத்து, கூட்டு கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டு, கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
அவ்வகையில், நேற்று, தமிழக கூட்டுக் கண்காணிப்பு குழுவினர், ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஓரக்கலியூர் பகுதியில், ஏழு இடங்களில் முறைகேடாக குழாய் பதித்தும், ஆயில் இன்ஜின் பயன்படுத்தியும் ஆற்றில் இருந்து தண்ணீர் திருடப்படுவது கண்டறியப்பட்டது.
அப்போது, அனுமதியின்றி ஆற்றில் அமைத்து இருந்த, ஏழு குழாய்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். தவிர, ஆயில் இன்ஜினையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கண்காணிப்புக் குழுவினர் கூறுகையில், 'ஆழியாறு ஆற்றில், முறையற்ற வகையில் தண்ணீர் எடுப்பது கண்டறியப்பட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன், மின் இணைப்பும் துண்டிக்கப்படும்.
அதிகாரிகள் நடவடிக்கைக்கு, நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,' என்றனர்.