ADDED : ஆக 10, 2026 07:04 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் கோவை இடையே, மெமு பாசஞ்சர் ரயில், 12 பெட்டிகளுடன், இயக்கப்பட்டதை அடுத்து, பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேட்டுப்பாளையம் கோயம்புத்தூர் இடையே மெமு பாசஞ்சர் ரயில், எட்டு பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. இதில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம், மெமு பாசஞ்சர் ரயிலில், எட்டு பெட்டிகளுடன் கூடுதலாக, நான்கு பெட்டிகளை இணைத்து, இயக்க ஏற்பாடு செய்தது. பாலக்காட்டில் இருந்து கோவை வழியாக, 12 பெட்டிகளுடன் பாசஞ்சர் ரயில், நேற்று முன்தினம் மாலை மேட்டுப்பாளையத்திற்கு வந்தது.
நேற்று காலை, 8:15 மணிக்கு ரயில் பயணிகள் சங்கத்தினர், தன்னார்வ அமைப்பினர், ரயில் இன்ஜினுக்கு பெரிய மாலை அணிவித்தனர். அதைத் தொடர்ந்து டிரைவர், கார்டு ஆகியோருக்கு இனிப்பு வழங்கினர். மேட்டுப்பாளையத்தில் இருந்து முதன்முறையாக காலை, 8:20 மணிக்கு, 12 பெட்டிகளுடன் மெமு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
