/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எகிறும் வீட்டு வாடகையால் திணறும் மக்கள்
/
எகிறும் வீட்டு வாடகையால் திணறும் மக்கள்
ADDED : ஆக 10, 2024 03:11 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், வீட்டு வாடகை தாறுமாறாக உயர்த்தி கோரப்படுவதால், மக்கள் பரிதவிக்கின்றனர்.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், வாடகை வீடுகளில் வசிப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், சமீப காலமாக, வீட்டு வாடகை தாறுமாறாக உயர்த்தப்படுவதால், பலர் செய்வதறியாது திணறுகின்றனர்.
கட்டுமானச்செலவு, சொத்துவரி உயர்வு என, பல காரணங்கள் முன்னிறுத்தி, இரு மடங்களாக வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.
அதேநேரம், புரோக்கர்கள், இரு தரப்பிலும், பாதி அல்லது முழு மாத வாடகையை கமிஷனாகப் பெற்றுக்கொள்ள வாடகையை உயர்த்தி சொல்லச் சொல்வதும் வாடிக்கையாகி விட்டது. வீட்டு உரிமையாளர்கள் பழைய வீடு, புதிய வீடு என்று வேறுபாடு பார்ப்பது கிடையாது.
வீடுகளைப் பராமரிக்க அதிக செலவாகும் என்பதால், வீட்டு வாடகையை உயர்த்தி விடுகின்றனர். அதேபோல, மக்களும், அலுவலகம் மற்றும் குழந்தைகளின் கல்வியைக் கருத்தில் கொண்டு, நகரங்களிலேயே வீடு தேடுகின்றனர்.
இதனால், சில குறிப்பிட்ட பகுதிகளில் வாடகை உயர்ந்து கொண்டே இருக்கும். இந்த உயர்வு, எந்தவித வரம்பும் இல்லாமல் இருப்பதால், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் இடையே எதிர்பாராத பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
வக்கீல்கள் கூறியதாவது:
தமிழ்நாடு, சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம் உள்ளது.
இச்சட்டத்தின்படி, குத்தகைதாரர், வாடகைதாரர் இடையில் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யலாம். அதன்படி, ஒரு வீட்டின் ஒட்டு மொத்த மதிப்பில், 9 சதவீத தொகையையே ஆண்டு வாடகையாக பெற வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.