/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைச்சோறு எடுத்து வழிபட்ட மக்கள்
/
மழைச்சோறு எடுத்து வழிபட்ட மக்கள்
ADDED : மே 08, 2024 12:44 AM

சூலுார்;மழை வேண்டி வீடு, வீடாக சென்று மழைச்சோறு எடுத்து, வருண பகவானுக்கு படைத்து வழிபட்டனர் செலக்கரச்சல் கிராம மக்கள்.
இந்தாண்டு கோடை வெப்பம் அதிகரித்து, வெப்ப அலை வீசி வருகிறது. இத்துடன் அக்னி நட்சத்திரமும் சேர்ந்ததால் மக்கள், கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். கோடை மழையும் இதுவரை பெய்யாததால், வெயிலுக்கு அஞ்சி, மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மழை வேண்டி மழைச்சோறு எடுத்து வழிபட செலக்கரச்சல் கிராம மக்கள் முடிவு செய்தனர். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சோறு பெற்று வருண பகவானுக்கு வைத்து படையலிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதுதான் மழை சோறு என்று கூறப்படுகிறது.
அதன்படி நேற்று காலை அங்குள்ள பரமசிவன் கோவிலில் வழிபாடு செய்த பெண்கள் மற்றும் சிறுமிகள், மேள, தாளத்துடன் வீடு, வீடாக சென்று மழைச்சோறு பெற்றனர்.
பின்னர், ஊரின் கிழக்குப்பகுதியில் உள்ள வருண பகவானுக்கு மழைச்சோற்றை படையிலிட்டு வழிபாடு செய்தனர். படையல் பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. மழை வேண்டி அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்தனர். இதில், விவசாயிகள், நெசவாளர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், ''முன்பெல்லாம் முறையாக மழை பெய்தது. அளவான வெயிலும் அடித்தது.
இப்போது, கால நிலை மாற்றத்தால், அனைத்தும் மாறி வருகிறது. கோடை உழவு செய்து மழையை எதிர்பார்த்துள்ளோம்.
இதுவரை மழை பெய்யவில்லை. அதனால், அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பழங்காலத்தில் மழை பொய்த்து போனால், மழைச்சோறு எடுத்து இறைவனை வழிபட்டால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை. அதனால், மழைச்சோறு எடுத்து வழிபட்டோம்,'' என்றனர்.

