/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தட்கல்' மின் இணைப்பு கிடைக்கலை l பல லட்சம் செலுத்தியும் பயனில்லை... விவசாயிகள் பரிதவிப்பு!
/
'தட்கல்' மின் இணைப்பு கிடைக்கலை l பல லட்சம் செலுத்தியும் பயனில்லை... விவசாயிகள் பரிதவிப்பு!
'தட்கல்' மின் இணைப்பு கிடைக்கலை l பல லட்சம் செலுத்தியும் பயனில்லை... விவசாயிகள் பரிதவிப்பு!
'தட்கல்' மின் இணைப்பு கிடைக்கலை l பல லட்சம் செலுத்தியும் பயனில்லை... விவசாயிகள் பரிதவிப்பு!
ADDED : செப் 09, 2024 08:14 AM
அன்னுார் : விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு 'தட்கல்' திட்டத்தில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி பல மாதங்கள் ஆகியும் இணைப்பு கிடைக்காததால் விவசாயிகள் தவிக்கின்றனர்.
தமிழக அரசு, விவசாயத்திற்கு சாதாரண, சுயநிதி மற்றும் 'தட்கல்' திட்டத்தில் மின் இணைப்பு வழங்கி வருகிறது. சாதாரண மின் இணைப்புக்கு பதிவு செய்து, பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். விரைவில் இணைப்பு கிடைக்காது.
விவசாயிகள் பலர் சுயநிதி பிரிவில் மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்கின்றனர். சுயநிதி பிரிவில் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். எனினும் வழித்தட செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும்.
'தட்கல்' என்னும் திட்டம் 2018ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய அ.தி.மு.க., அரசு 5 எச்.பி., திறனுள்ள மின்மோட்டார் இணைப்பு வழங்க 2.50 லட்சம் ரூபாயும், 7.5 எச்.பி., மின் மோட்டாருக்கு 2.75 லட்சம் ரூபாயும், 10 எச்.பி., மின் மோட்டாருக்கு 3 லட்சம் ரூபாயும், 15 எச்.பி., மின் மோட்டாருக்கு 4 லட்சம் ரூபாய் என கட்டணம் நிர்ணயித்தது.
இந்த திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு, 2018 முதல் 2020 வரை ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டன.
தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 'தட்கல்' திட்டத்தில் தமிழகம் முழுவதும் பல ஆயிரம் பேர் விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தனர். இதில் 2021 செப்டம்பரில் ஒரு லட்சம் பேருக்கு விவசாய மின் இணைப்பு வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதன் பிறகு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.
தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு வழங்குவது தாமதமாகி வருகிறது.
இதுகுறித்து பொகலூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:
விவசாய மின் இணைப்புக்காக சாதாரண பிரிவில் விண்ணப்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. மின் இணைப்பு கிடைக்கவில்லை. எனவே, 'தட்கல்' திட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் 5 எச்.பி., திறனுக்கு, 2.50 லட்சம் ரூபாய் செலுத்தினோம்.
அன்னுார், கோவில்பாளையம், காரமடை, சூலுார் பகுதியில் பல நுாறு விவசாயிகள் 'தட்கல்' திட்டத்தில் மின் இணைப்புக்கு கட்டணம் செலுத்தி விட்டு கிடைக்காததால் பரிதவிக்கின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் 'தட்கல்' திட்டத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு 90 நாட்களுக்குள் இணைப்பு தரப்பட்டது.
தற்போதைய அரசு 180 நாட்களுக்குள் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் 240 நாட்கள் ஆகியும் மின் இணைப்பு வழங்கவில்லை.
மின்வாரிய அலுவலகத்தில் விசாரித்தால், 'மின்கம்பம் இல்லை. அதிக தொலைவு, நிதி இல்லை,' என ஏதாவது ஒரு காரணம் தெரிவிக்கின்றனர். மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மற்றும் தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு பலமுறை மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை.
தற்போது, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 'தட்கல்' திட்டத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கினால், கிணற்று நீரை பயன்படுத்தி தரிசு நிலங்களை விவசாய நிலமாக மாற்ற முடியும்.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.