/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளம்பர தாங்கிகளான மின்கம்பங்கள்; கண்டறிந்து அப்புறப்படுத்த கோரிக்கை
/
விளம்பர தாங்கிகளான மின்கம்பங்கள்; கண்டறிந்து அப்புறப்படுத்த கோரிக்கை
விளம்பர தாங்கிகளான மின்கம்பங்கள்; கண்டறிந்து அப்புறப்படுத்த கோரிக்கை
விளம்பர தாங்கிகளான மின்கம்பங்கள்; கண்டறிந்து அப்புறப்படுத்த கோரிக்கை
ADDED : செப் 04, 2024 11:18 PM
பொள்ளாச்சி : மின்விளக்கு கம்பங்களில், விதிமீறி விளம்பர பலகைகள் கட்டப்படுவதைக் கண்டறிந்து தடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகரில், பொது இடங்களில், அரசியல் கட்சி பொதுக்கூட்டம், வர்த்தகம் என பல்வேறு வகைகளில் விளம்பர பதாகைகள், நிரந்தர விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஒரு கட்டத்தில் அவைகள் விதிமீறி வைக்கப்படுவதால், நகரின் அழகே சீர்குலைந்து வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தும், விதிகளைப் புறக்கணித்து, அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பேனர்கள் இடையூறாகவும் மாறி வருகின்றன.
இதுஒருபுறமிருக்க, மின்கம்பங்களில், இத்தகைய விளம்பரப் பலகைகள் அதிகளவில் காணப்படுகின்றன.
நகர் மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இதே நிலை காணப்படுகிறது. பெரிய அளவிலான தகரத்தால் ஆன விளம்பர பலகைகளை, மின்கம்பங்களே தாங்கி நிற்கின்றன.
ஏதேனும் பழுது நீக்க பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட முற்பட்டால், சிரமம் ஏற்படும் என்பதை வணிகக் கடைக்காரர்கள் உணர்வதும் கிடையாது.
இத்தகைய செயலில் ஈடுபட்டவர்களை கண்டித்து தடுக்காததால், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் போட்டி போட்டுக் கொண்டு, மின்கம்பங்களை மையப்படுத்தி விளம்பர பலகைகள் வைப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
எனவே, விளம்பரப் பலகை, பதாகைகளை மின்வாரியத்துக்கு சொந்தமான மின் கம்பத்திலோ, மின் கம்பிகளின் அருகிலோ கட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
மக்கள் கூறுகையில், 'இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கவும், விளம்பர பலகைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.