/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரங்கநாதர் கோவிலில் பூணுால் அணிவிக்கும் வைபவம்
/
அரங்கநாதர் கோவிலில் பூணுால் அணிவிக்கும் வைபவம்
ADDED : ஆக 20, 2024 01:56 AM

மேட்டுப்பாளையம்;காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, அரங்கநாதருக்கு பூணூல் அணிவிக்கும் வைபவம் நடந்தது.
கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இங்கு ஆவணி அவிட்டம் யசூர் வேத, உபகர்மா என்னும் பூணூல் அணிவிக்கும் வைபவம் நடந்தது. கோவிலில் காலையில் நடை திறந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. கால சந்தி பூஜைக்கு பின், யசூர் உபகர்மா என்னும் பூணூல் போடும் வைபவம் தொடங்கியது.
இதில் விஸ்வக்சேனர், ஆராதனம், புண்யாகவசனம் செய்த பின், அரங்கநாத பெருமாளுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மகா சங்கல்பம், ஜெப சங்கல்பம் செய்யப்பட்டது. பின்பு கோவில் ஸ்தலத்தார், அர்ச்சகர்கள் ஆகியோர் பூணூல் அணிவித்துக் கொண்டனர்.
வேத ஆரம்பம், பூர்ணாகுதி, சாற்றுமுறை சேவிக்கப்பட்டது. இந்த வைபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அரங்கநாத பெருமாளை வழிபட்டுச் சென்றனர்.
*மேட்டுப்பாளையம் நகரில் காட்டூர் ஐயப்பன் கோவிலில், பிராமணர் சங்கத்தின் சார்பில், பூணூல் போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஹரிஹர சுப்பிரமணியம் வாத்தியார், பூணூல் போடும் பூஜைகளை செய்தார். அதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும், புதிய பூணூல் அணிவித்துக் கொண்டனர்.