/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் கோட்ட அளவிலான விருதுகள் வழங்கும் விழா
/
தபால் கோட்ட அளவிலான விருதுகள் வழங்கும் விழா
ADDED : ஜூன் 10, 2024 11:52 PM

பெ.நா.பாளையம்;கவுண்டம்பாளையம் துணை தபால் அலுவலக வளாகத்தில் உள்ள மின் வணிக பார்சல் முன்பதிவு மையத்தில், கோவை தபால் கோட்டம் மற்றும் கோவை ஆர்.எம்.எஸ்., கோட்டம் சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடந்தது.
இந்நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்திய தபால் ஊழியர்களுக்கும், சேமிப்பு கணக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும், 250 ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், கோவை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் சிவசங்கர் பேசுகையில், 'கோவை தபால் கோட்டம் கடந்த நிதி ஆண்டில், 23 ஆயிரம் சேமிப்பு கணக்குகள் துவக்க இலக்காக வழங்கப்பட்ட நிலையில், 25 ஆயிரம் சேமிப்பு கணக்குகள் துவங்கி, மண்டல அளவில் சாதனை படைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் சுமார், 89 ஆயிரம் எண்ணிக்கையில் ஆதார் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
தபால் நிலையங்களில் தங்க பத்திரம் வாயிலாக, 17 கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் வாயிலாக, 50,000 புதிய வங்கி கணக்குகள் துவக்கப்பட்டு, பல உதவித் தொகைகள் தபால் துறை வாயிலாக வழங்கப்பட்டுள்ளது' என்றார்.
கோவை ஆர்.எம்.எஸ்., கோவை கோட்ட கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு பேசுகையில், 'பார்சல் மற்றும் விரைவு தபால் சேவையில், 10.12 கோடி ரூபாய் வணிகம் ஈட்டியதாகவும், இதில், குறிப்பாக, லாஜிஸ்டிக் பார்சல் வணிகத்தில் மட்டும், 5.76 கோடி ரூபாய் வணிகம் செய்து, மேற்கு மண்டல அளவில் முதலிடம் வகிக்கிறது என்றார்.

