/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்க்கார்பதியில் மின் உற்பத்தி துவக்கம்; காண்டூர் கால்வாயில் நீர் திறப்பு
/
சர்க்கார்பதியில் மின் உற்பத்தி துவக்கம்; காண்டூர் கால்வாயில் நீர் திறப்பு
சர்க்கார்பதியில் மின் உற்பத்தி துவக்கம்; காண்டூர் கால்வாயில் நீர் திறப்பு
சர்க்கார்பதியில் மின் உற்பத்தி துவக்கம்; காண்டூர் கால்வாயில் நீர் திறப்பு
ADDED : மார் 07, 2025 09:56 PM

பொள்ளாச்சி; சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில், 'டர்பன்' பழுது சரி செய்த பின், மீண்டும் காண்டூர் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, பாசனத்துக்கு நீர் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்துக்கும் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
நடப்பாண்டு பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால், பெருவாரிப்பள்ளம், துாணக்கடவு வழியாக சர்க்கார்பதிக்கு நீர் திறக்கப்பட்டு, அங்கு மின் உற்பத்தி செய்து, காண்டூர் கால்வாய் வழியாக நீர் திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு நீர் இருப்பு வைத்து, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு கடந்த ஜன., மாதம், 29ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. முதல் சுற்று தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில், 'டர்பன்' பழுது ஏற்பட்டதால், காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து, நீர்வளத்துறை அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதை சரி செய்யும் பணியை மேற்கொண்டனர். பணிகள் நிறைவடைந்த பின், நேற்றுமுன்தினம் முதல் சர்க்கார்பதியில் மின் உற்பத்தி துவங்கப்பட்டு, காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'சர்க்கார்பதி மின்உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து, மின் உற்பத்தி செய்து காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
சர்க்கார்பதியில், 25 மெகாவாட் மின் உற்பத்தி செய்து, வினாடிக்கு, 1,200 கனஅடி நீர் திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக செல்கிறது. தண்ணீர் இருப்பு வைத்து விரைவில் இரண்டாம் சுற்று தண்ணீர் வழங்கப்படும்,' என்றனர்.