/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடக்க கல்வி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் பள்ளிகளில் கல்வி கற்பித்தல் பணி பாதிப்பு
/
தொடக்க கல்வி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் பள்ளிகளில் கல்வி கற்பித்தல் பணி பாதிப்பு
தொடக்க கல்வி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் பள்ளிகளில் கல்வி கற்பித்தல் பணி பாதிப்பு
தொடக்க கல்வி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் பள்ளிகளில் கல்வி கற்பித்தல் பணி பாதிப்பு
ADDED : செப் 11, 2024 02:54 AM

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 'டிட்டோ ஜாக்' சார்பில், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில், மாநிலம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
அதில், பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கக்கூடியதாக உள்ள மாநில முன்னுரிமையை கொண்டு வந்துள்ள அரசாணை, 243யை ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை சரி செய்து, மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை, கடந்த, 2006ம் ஆண்டு ஜன.,1ம் தேதி முதல் வழங்க வேண்டும். முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்.
ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதி தேர்வு தேவையில்லை என்பதை தமிழக அரசு கொள்கை முடிவாக அறிவித்து, தகுதி தேர்வு சார்பான நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடித்து, பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். இவை உள்ளிட்ட, 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 'டிட்டோ ஜாக்' சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், பொள்ளாச்சி மாவட்ட தொடக்க கல்வி அலுவலம் முன், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர் தங்கபாசு தலைமை வகித்தார்.
தமிழ் ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் நிவாஸ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வட்டார செயலாளர் தினகரன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் பழனிக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பேசினர்.
'ஆப்சென்ட்' எவ்வளவு?
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 1,526 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அதில், 845 ஆசிரியர்கள் நேற்று பணியாற்றினர்; ஏற்கனவே, 116 ஆசிரியர்கள் அனுமதி பெற்று விடுப்பு எடுத்துள்ளனர். 565 ஆசிரியர்கள் அனுமதியின்றி விடுப்பு எடுத்துள்ளனர்.
ஆசிரியர்கள் விடுப்பு எடுத்ததால், இரு ஆசிரியர் பள்ளிகளில் ஒரு ஆசிரியரே வகுப்புகள் எடுக்கும் சூழல் காணப்பட்டது. பல இடங்களில், மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பணியில் உள்ள ஆசிரியர்கள் சமாளிக்க முடியாமல் திணறினர்.
உடுமலை
உடுமலை வட்டாரத்தில், துவக்க நிலை ஆசிரியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிகள் திறந்திருந்தாலும், ஆசிரியர்கள் இல்லாமல் வகுப்புகள் பாதிக்கப்பட்டன. ஆசிரியர் பயிற்றுனர்கள், இல்லம்தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் வாயிலாக, பள்ளிகள் செயல்படுத்தப்பட்டன.
உடுமலை வட்டாரத்தில், 117 அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அதில், 240 ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 115 ஆசிரியர்கள் பணியில் இருந்தனர். வட்டார கல்வி அலுவலர்கள் பள்ளிகள் செயல்படுவதை, ஆய்வு மேற்கொண்டு கண்காணித்தனர்.