/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பால 'ரவுண்டானா'வை விஸ்தரிக்க பரிந்துரை! மாநில நெடுஞ்சாலைத்துறை வரைபடம் சமர்ப்பிப்பு
/
மேம்பால 'ரவுண்டானா'வை விஸ்தரிக்க பரிந்துரை! மாநில நெடுஞ்சாலைத்துறை வரைபடம் சமர்ப்பிப்பு
மேம்பால 'ரவுண்டானா'வை விஸ்தரிக்க பரிந்துரை! மாநில நெடுஞ்சாலைத்துறை வரைபடம் சமர்ப்பிப்பு
மேம்பால 'ரவுண்டானா'வை விஸ்தரிக்க பரிந்துரை! மாநில நெடுஞ்சாலைத்துறை வரைபடம் சமர்ப்பிப்பு
ADDED : மே 08, 2024 12:36 AM

கோவை:கோவை - அவிநாசி ரோடு, உப்பிலிபாளையத்தில் உள்ள பழைய மேம்பாலம் 'ரவுண்டானா'வை விஸ்தரிப்பு செய்ய, மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழு பரிந்துரைத்துள்ளது.
கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டும் பணி துரிதகதியில் நடந்து வருகிறது; டிசம்பர் மாதத்துக்குள் இப்பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இப்பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது, கோல்டுவின்ஸ் பகுதியில் இருந்து நகரப்பகுதியை நோக்கி, ஏராளமான வாகனங்கள் வந்தடையும். அப்போது, உப்பிலிபாளையம் சந்திப்பில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
அதனால், இப்போதே திட்டமிட்டு, உப்பிலிபாளையம் சந்திப்பு மற்றும் பழைய மேம்பாலத்தை சற்று விஸ்தரிக்கலாம் என, மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழு சார்பில், கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டிக்கு யோசனை தெரிவிக்கப்பட்டது.
ஏனெனில், அவிநாசி ரோடு பழைய மேம்பாலம் ரவுண்டானா (ரோட்டரி), அவிநாசி ரோடு - கூட்ஸ் ஷெட் ரோடு - மில் ரோடு - ப்ரூக்பாண்ட் ரோடு ஆகிய நான்கு ரோடுகளை இணைக்கிறது. இந்த ரோடுகளில் வரும் வாகன ஓட்டிகள், 'ரோட்டரி'யை சுற்றி வந்து, செல்ல வேண்டிய ரோட்டுக்கு எளிதாக செல்கின்றனர்.
மழை பெய்யும்போது, பாலத்துக்கு கீழ் தண்ணீர் தேங்கினால், நான்கு ரோடுகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், 'ரோட்டரி'யை பயன்படுத்துகின்றன. அச்சமயங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காண, அருகாமையில் உள்ள காலியிடத்தில் துாண்கள் எழுப்பி, மேம்பாலத்தை சற்று விஸ்தரிக்கலாம் என்கிற யோசனை முன்வைக்கப்பட்டது.
மாநில நெடுஞ்சாலைத்துறை (சாலை பாதுகாப்பு) கோட்ட பொறியாளர் மனுநீதி கூறுகையில், ''உப்பிலிபாளையம் பழைய பாலம் ரவுண்டானா விஸ்தரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வரைபடம் தயாரித்து, கலெக்டரிடம் சமர்ப்பித்துள்ளோம். உப்பிலிபாளையத்தில் இருந்து வருவோர் கூட்ஸ் ஷெட் ரோட்டுக்கு திரும்புவதற்கு எளிதாக, 5 மீட்டர் அகலத்துக்கு மேம்பாலத்தை அகலப்படுத்தலாம்.
''தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் இருக்கிறது. அங்கு துாண்களுக்கு எழுப்பி, ஓடுதளம் அமைத்தால், போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும். 75 லட்சத்துக்கும் குறைவாகவே செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது,'' என்றார்.
இதுதொடர்பாக, நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்த கலெக்டர் கிராந்திகுமார், ''தேசிய நெடுஞ்சாலைத்துறையில் தடையின்மை சான்று (என்.ஓ.சி.,) பெற்று, மாநில நெடுஞ்சாலைத்துறையினரே, புதிய மேம்பாலம் கட்டுவதோடு இப்பணியையும் சேர்த்து மேற்கொள்ளுங்கள்,'' என, அறிவுறுத்தினார்.

