/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதியிலேயே நிற்கும் அங்கன்வாடி கட்டடப்பணி பொதுமக்கள் அதிருப்தி
/
பாதியிலேயே நிற்கும் அங்கன்வாடி கட்டடப்பணி பொதுமக்கள் அதிருப்தி
பாதியிலேயே நிற்கும் அங்கன்வாடி கட்டடப்பணி பொதுமக்கள் அதிருப்தி
பாதியிலேயே நிற்கும் அங்கன்வாடி கட்டடப்பணி பொதுமக்கள் அதிருப்தி
ADDED : ஆக 12, 2024 01:31 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே சின்னாம்பாளையத்தில், அங்கன்வாடி மைய கட்டடம் அருகே குழியாக உள்ளதால், குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும், புதிய கட்டடம் கட்டும் பணியும் பாதியிலேயே நிற்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே சின்னாம்பாளையம் பி.ஆர்., நகர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. மையம், காலை, 8:30 மணி முதல் மாலை, 4:00 மணி வரை செயல்படுகிறது.
இங்கு, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். கட்டடம் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. கட்டடத்தின் முன்பகுதி விரிசல் விட்டும், பாழடைந்தது போன்று காட்சியளிக்கிறது.
இந்த கட்டடம் அருகே கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் அருகே, மெகா சைஸ் குழி தோண்டப்பட்டு பல மாதங்களாகிறது. இதனால், குழந்தைகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
அங்கன்வாடி மையம் அருகே தோண்டப்பட்ட குழி, இன்னும் மூடப்படாமல் உள்ளது. செப்டிக் டேங்க் கட்டுவதற்காக அல்லது வேறு பயன்பாட்டுக்காகவா என தெரியவில்லை. இக்குழி குழந்தைகளை அச்சுறுத்தும் விதமாக உள்ளது.
குழந்தைகள் வெளியே வந்து விளையாடும் போது, எதிர்பாரதவிதமாக குழியில் சிக்கி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த குழியில் மழைநீர் அவ்வப்போது தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தி மையமாக மாறி தொற்று நோய்களை இலவசமாக பரப்புகிறது. இதை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
குழியை மூடவோ அல்லது விடுபட்ட பணியை உடனடியாக முடித்து குழந்தைகள் பாதுகாப்பினை ஊராட்சி நிர்வாகம் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.
ஆறு ஆண்டுகளாக நடக்கிறது
அங்கன்வாடி மைய கட்டடம் கட்டும் பணிகள், ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு மட்டுமே பணிகள் மேற்கொண்டு தற்போது, பாதியிலேயே பணிகள் நிற்கின்றன.
பழைய கட்டடம் மோசமாக உள்ள சூழலில், அங்கு பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். எனவே, உடனடியாக புதிய கட்டடப்பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
விரைவில் துவங்கப்படும்
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'அங்கன்வாடி மைய கட்டடம் ஒப்பந்தம் எடுத்தவர் இறந்த நிலையில், மாற்று நபருக்கு கட்டடம் கட்ட ஒப்பந்தம் வழங்கப்பட்டது. பாதியில் நிற்கும் கட்டடப்பணி முழுமையாக முடிக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்படும்,' என்றனர்.