/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுத்த வேஸ்ட்! காந்திபுரம் மேம்பாலத்துக்கு தீர்வு வரவே... வராதோ? ரூ.25 கோடி ஒதுக்கியும் பயன்படுத்தாத நெடுஞ்சாலைத்துறை
/
சுத்த வேஸ்ட்! காந்திபுரம் மேம்பாலத்துக்கு தீர்வு வரவே... வராதோ? ரூ.25 கோடி ஒதுக்கியும் பயன்படுத்தாத நெடுஞ்சாலைத்துறை
சுத்த வேஸ்ட்! காந்திபுரம் மேம்பாலத்துக்கு தீர்வு வரவே... வராதோ? ரூ.25 கோடி ஒதுக்கியும் பயன்படுத்தாத நெடுஞ்சாலைத்துறை
சுத்த வேஸ்ட்! காந்திபுரம் மேம்பாலத்துக்கு தீர்வு வரவே... வராதோ? ரூ.25 கோடி ஒதுக்கியும் பயன்படுத்தாத நெடுஞ்சாலைத்துறை
ADDED : ஆக 15, 2024 04:03 AM

கோவை : கோவை காந்திபுரம் மேம்பாலத்தில், இரு இடங்களில் இறங்கு தளங்கள் அமைக்க, தமிழக அரசு ரூ.25 கோடி ஒதுக்கியது. ஆனால், 'மெட்ரோ ரயில்' திட்டத்தை காரணம் காட்டி, இறங்கு தளங்கள் அமைக்கும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை கைவிட்டிருக்கிறது. ஆனால், இறங்குதளங்கள் அமைக்க வேண்டுமென்பதே, ஒட்டுமொத்த கோவைவாசிகளின் கோரிக்கை.
கோவை, காந்திபுரத்தில் டவுன் பஸ் ஸ்டாண்ட், சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட், அதிவிரைவு பஸ் ஸ்டாண்ட், ஆம்னி பஸ் ஸ்டாண்ட்டுகள் அருகருகே அமைந்திருக்கின்றன.
நஞ்சப்பா ரோடு, கிராஸ்கட் ரோடு, நுாறடி ரோட்டில் வர்த்தக நிறுவனங்கள் அதிகமாக இருக்கின்றன. இதன் காரணமாக, காந்திபுரம் பகுதியை தினமும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.
கணபதி, சரவணம்பட்டி, அன்னுார் பகுதிகளில் இருந்து கோவை நகர்ப்பகுதிக்குள் வருவோர் ஏராளம். இதேபோல், கிழக்கு பகுதியில் இருந்து மேற்குப்பகுதிக்கு பணி நிமித்தமாக செல்வோரும் அதிகம். அதனால், காலை முதல் இரவு வரை எந்நேரமும் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகரித்து காணப்படுகிறது.
போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க, காந்திபுரம் பகுதியில் மேம்பாலம் கட்டப்படும் என, தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது அறிவிக்கப்பட்டது.
அவிநாசி ரோடு உப்பிலிபாளையம் பழைய பாலத்தில் வாகனங்கள் சுற்றிச் செல்வதுபோல், கிராஸ்கட் ரோடு மற்றும் நுாறடி ரோடு சந்திப்புகளில் 'ரோட்டரி' அமைத்து, எதிர்திசையில் உள்ள ரோடுகளுக்குச் செல்லும் வகையில், மேம்பாலம் வடிவமைக்கப்பட்டது.
நிலம் கையகப்படுத்த, கடைகளை அகற்ற வேண்டியிருந்தது. அதை தவிர்க்க, 'ரோட்டரி' அமைக்கும் திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் கைவிடப்பட்டு, இரு அடுக்கு பாலங்களாக 'டிசைன்' மாற்றப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இப்போது, கணபதியில் இருந்து வருவோர், பாரதியார் ரோட்டுக்கு கீழிறங்க முடியாமல் நஞ்சப்பா ரோடு பார்க் கேட் சந்திப்பு வரை வந்து, ரவுண்டானாவை சுற்றி, மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது. அவ்வாறு செல்ல விரும்பாதவர்கள், பாலத்தை பயன்படுத்தாமல் ரோட்டில் பயணிக்கின்றனர்.
இதேபோல், நஞ்சப்பா ரோட்டில் செல்வோர் நுாறடி ரோட்டில் இறங்க முடியாமல் டெக்ஸ்டூல் பாலம் வரை சென்று, 'யூ டேர்ன்' அடித்து, மீண்டும் திரும்பி வர வேண்டியிருக்கிறது. இவ்விரு பிரச்னைகள் தொடர்வதால், ரோட்டை பயன்படுத்தும் வாகனங்கள் இன்னும் அதிகமாகவே இருக்கின்றன. கிராஸ்கட் ரோடு சந்திப்பு மற்றும் நுாறடி ரோடு சந்திப்பில், வாகனங்கள் தேங்குவது தொடர்கதையாக நீடிக்கிறது.
இதற்கு தீர்வு காண, நஞ்சப்பா ரோட்டில் இருந்து செல்வோர் நுாறடி ரோட்டில் இறங்கவும், கணபதியில் இருந்து வருவோர் பாரதியார் ரோட்டில் இறங்கவும் இறங்கு தளம் அமைக்கப்படும் என, அ.தி.மு.க., அரசு அறிவித்தது.
இவ்விரு இடங்களில் இறங்கு தளங்கள் அமைக்க, ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டது. தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்து, 'டிசைன்' தயாரிக்கப்பட்டது.
இச்சூழலில், காந்திபுரம் வழியாக சத்தி ரோட்டில், 'மெட்ரோ ரயில்' இயக்குவதற்கு கருத்துரு சமர்ப்பித்து இருப்பதால், இறங்கு தளங்கள் அமைக்கும் திட்டத்தை, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது இத்திட்டத்தை கைவிட்டு விட்டனர்.
'மெட்ரோ ரயில்' திட்டத்துக்கு இன்னும் மத்திய அரசு அனுமதி தரவில்லை. அனுமதி அளித்தபின், நிதியுதவி பெற்று, செயலாக்கத்துக்கு கொண்டு வருவதற்கு இன்னும் பல ஆண்டுகளாகும்.
ஆனால் அத்திட்டம் வருவதற்காக, இறங்கு தளம் அமைக்கும் பணியை கைவிட்டது, கோவை மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திட்டமிட்டபடி இறங்குதளம் அமைக்க வேண்டும். அமைக்காதபட்சத்தில் மொத்த மேம்பால கட்டுமானமும் வீண்தான். மேம்பாலத்தை சொற்ப வாகனங்கள்தான் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது