/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர் சீருடை துணியின் தரம் ஆய்வு
/
துாய்மை பணியாளர் சீருடை துணியின் தரம் ஆய்வு
ADDED : செப் 12, 2024 09:38 PM
கோவை : கோவை மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு, அவற்றின் தரம் மற்றும் பொருட்கள் தேர்வு நேற்று நடந்தது.
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துாய்மை பணியாளர்களுக்கு, தீபாவளி பண்டிகைக்கு முன், சீருடை, கையுறை, காலுறை மற்றும் முக கவசம், ஒளிரும் ஜாக்கெட், செருப்பு, கை கழுவும் சோப்பு உள்ளிட்டவை வழங்கப்படும். இப்பொருட்கள் சில சமயங்களில் தரமற்றவையாக அமைந்து விடுகின்றன அல்லது, துாய்மை பணியாளர்கள் பயன்படுத்த உகந்ததாக இருப்பதில்லை. அதனால், கொள்முதல் செய்ய உள்ள பொருட்களின் மாதிரியை, மாநகராட்சி அலுவலகத்தில் காட்சிப்படுத்த, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார்.
கமிஷனருடன், மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், நகர் நல அலுவலர் (பொ) பூபதி ஆகியோரது முன்னிலையில், துாய்மை பணியாளர்கள், அப்பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தனர்.
எத்தனை தொழிலாளர்களுக்கு இப்பொருட்கள் தேவை என கணக்கெடுக்கப்பட்டு, ஆர்டர் கொடுத்து, தீபாவளி பண்டிகைக்கு முன் வழங்கப்படும். சீருடை தைப்பதற்கான தையல் கூலியும் வழங்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.