/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருச்சி பச்சிளங்குழந்தைக்கு கோவையில் அரிய சிகிச்சை!
/
திருச்சி பச்சிளங்குழந்தைக்கு கோவையில் அரிய சிகிச்சை!
திருச்சி பச்சிளங்குழந்தைக்கு கோவையில் அரிய சிகிச்சை!
திருச்சி பச்சிளங்குழந்தைக்கு கோவையில் அரிய சிகிச்சை!
ADDED : செப் 17, 2024 11:27 PM

கோவை : பச்சிளங் குழந்தைக்கு, சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை டாக்டர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருச்சி நவகுடியை சேர்ந்த தம்பதி, திருமுருகன், துர்காதேவிக்கு, கடந்த மாதம், 27ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பிறவி இருதயக் குறைபாடு இருப்பது தெரிந்தது. இதற்கான சிகிச்சைக்காக, பிறந்து 7 நாட்களே ஆன குழந்தை, திருச்சியிலிருந்து இரண்டரை மணி நேரத்திற்குள் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவமனையின் குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜய் சதாசிவம் கூறுகையில், ''குழந்தைக்கு நுரையீரலில் இருந்து, இருதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய், இடது பக்கத்துக்கு பதில், வலது பக்கத்தில் இணைந்திருந்தது. அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமின்றி, இத்தகைய குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகள் பிழைப்பது கடினம்.
இக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை, மூன்றரை மணி நேரம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் நவீன கருவிகள் இருப்பதால், இது சாத்தியமானது,'' என்றார்.
மருத்துவமனை குழந்தைகளுக்கான இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் தேவபிரசாத் கூறுகையில், ''பிறக்கும், 100ல் ஒரு குழந்தைக்கு இப்பிரச்னை ஏற்படுகிறது. ஆண்டுக்கு 2.40 லட்சம் குழந்தைகள் பிறவி இருதய குறைபாடுகளுடன் பிறக்கின்றன. அதில், மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் இதுபோன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையுடன் பிறக்கின்றன.
அறுவை சிகிச்சைக்குப் பின் குழந்தைகள், இயல்பான வாழ்க்கை வாழமுடியும். பக்க விளைவுகள் இருக்காது. மருந்துகளும் குறிப்பிட்ட காலம் வரை எடுத்தால் போதும். இதுபோன்ற குறைபாடு ஏற்பட, குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. ஓரிரு சதவீத குழந்தைகளுக்கு, மரபணு குறைபாடால் இது ஏற்படுகிறது,'' என்றார்.
முன்னதாக, குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட பச்சிளங்குழந்தைகள் நல மருத்துவர் சித்தார்த் உள்ளிட்ட டாக்டர்கள் குழுவினருக்கு, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், முதன்மை செயல் அலுவலர் ராம்குமார் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.