/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயிருக்கு நீர்பாய்ச்சும் அளவை குறைக்கலாம்! வந்து விட்டது புதிய டிஜிட்டல் மண் ஈரப்பத மானி
/
பயிருக்கு நீர்பாய்ச்சும் அளவை குறைக்கலாம்! வந்து விட்டது புதிய டிஜிட்டல் மண் ஈரப்பத மானி
பயிருக்கு நீர்பாய்ச்சும் அளவை குறைக்கலாம்! வந்து விட்டது புதிய டிஜிட்டல் மண் ஈரப்பத மானி
பயிருக்கு நீர்பாய்ச்சும் அளவை குறைக்கலாம்! வந்து விட்டது புதிய டிஜிட்டல் மண் ஈரப்பத மானி
ADDED : ஆக 07, 2024 11:53 PM

கோவை: கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனம் சார்பில், டிஜிட்டல் மண் ஈரப்பதம் மானி வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மத்தியில் பயன்பாட்டுக்கு விரைவில் பரவலாக்கப்படவுள்ளது.
விவசாயத்தில் நீர் மேலாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. பயிருக்கு நீர் பாய்ச்சுவதில் உள்ள சவால்களை களையும் வகையில், டென்சியோ மீட்டர் கண்டுபிடிக்கப்பட்டது.
இக்கருவி பயன்பாட்டில் உள்ள சிரமங்களை தவிர்க்க, 2012ம் ஆண்டு மண்ஈரப்பதம் மானி அறிமுகப்படுத்தப்பட்டது.
மண்ணில் இந்த கருவியை சொருகினால், ஈரப்பதத்தை காட்டி விடும். அதை கொண்டு, நீர் பாய்ச்சலாமா, வேண்டாமா என்பதை விவசாயிகள் முடிவு செய்வர்.
தற்போது இக்கருவியின் மேம்படுத்தப்பட்ட வடிவம், 'டிஜிட்டல் மண்ஈரப்பதம் மானி', கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கரும்பு இனபெருக்க விஞ்ஞானி மற்றும் இயக்குனர் கோவிந்தராஜ் கூறியதாவது: மண் ஈரப்பதத்தை காட்டுவதற்கு, 'டென்சியோமீட்டர்' பயன்பாட்டில் இருந்தது. இதனை நிலத்திலேயே வைத்து, அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.
இதில் உள்ள சிரமங்களை களைந்து, எளிதாக கையாளவும், 'டிராபிக் லைட்' போன்று புரிந்துகொள்ளும் வகையிலும் வடிவமைத்து தர, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கைக்கு ஏற்ப, மண் ஈரப்பத மானி கண்டுபிடிக்கப்பட்டது. 2012ல் அறிமுகப்படுத்தப்பட்ட இக்கருவியை வணிகப்படுத்தும் உரிமத்தை, 21 நிறுவனங்களுக்கு இதுவரை வழங்கியுள்ளோம்.
தற்போது, இதனை மேம்படுத்தியுள்ளோம். இதற்கு, ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே உரிமம் அளித்துள்ளோம். இதனை பயன்படுத்தி, ஆண்டுக்கு 46 முறை நீர் பாய்ச்சுவதற்கு பதிலாக, 36 முறை பாய்ச்சினால் போதுமானது.
சரியான நேரத்தில், சரியான அளவு நீர் பாய்ச்ச, இந்த கருவி உபயோகமாக இருக்கும். இதுகுறித்து விவசாயிகள் கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.