/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெல் விதைப்பண்ணைகளை பதிவு செய்யுங்க! விதை சான்றளிப்புத்துறை அழைப்பு
/
நெல் விதைப்பண்ணைகளை பதிவு செய்யுங்க! விதை சான்றளிப்புத்துறை அழைப்பு
நெல் விதைப்பண்ணைகளை பதிவு செய்யுங்க! விதை சான்றளிப்புத்துறை அழைப்பு
நெல் விதைப்பண்ணைகளை பதிவு செய்யுங்க! விதை சான்றளிப்புத்துறை அழைப்பு
ADDED : பிப் 25, 2025 10:24 PM
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நெல் விதைப்பண்ணைகளை பதிவு செய்ய விதைச்சான்றளிப்புத் துறை இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.
பொள்ளாச்சி தாலுகா, ஆனைமலை, கோட்டூர், வேட்டைக்காரன்புதுார், பொங்காளியூர், வடக்கலுார் ஆகிய பகுதிகளில், தனியார் உற்பத்தியாளர்களால் நெல் விதை பண்ணைகள் அமைக்கப்பட்டு, தற்போது பயிர் பூப்பருவம் எய்தும் நிலையில் உள்ளது. விதைப்பண்ணைகளை பதிவு செய்ய கோவை மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு பருவத்துக்கு ஏற்ற ரகங்களான கோ -51, ஏடிடி -37 மற்றும் ஏடிடி(ஆர்)- 45, கோ - 55, ஏஸ்டி - 16 அதிகளவில் விதைப்பண்ணைகள், தனியார் விதை உற்பத்தியாளர்களால் அமைப்பட்டுள்ளது. இந்த ரகங்கள் குறுகிய வயதுடையவையாகும்.
விதைச்சான்று நடைமுறையின்படி, நெல் விதைப் பண்ணைகளை பூப்பதற்கு, 15 நாட்களுக்கு முன் விதைச்சான்றளிப்பு உதவி இயக்குனர், விதைச்சான்றளிப்பு உதவி இயக்குனர் அலுவலகம், 1424 - ஏ, தடாகம் ரோடு கோவையில் பதிவு செய்ய வேண்டும்.
விதைப்பண்ணைகளின் விதைப்பு அறிக்கைகளை தயார் செய்து, ஸ்பெக்ஸ் அல்லது சக்தி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், விதைப்பு அறிக்கைகளை மூன்று நகல்களில், விதை ஆதார அட்டைகள், விற்பனை பட்டியலுடன் உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்பித்து பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
ஒரு விதைப்பு அறிக்கைக்கு, 25 ரூபாயும், வயலாய்வு கட்டணம் ஏக்கருக்கு, 100 ரூபாயும், பகுப்பாய்வு கட்டணம் குவியலுக்கு, 80 ரூபாயும் விதைப்பு அறிக்கை பதிவின் போது செலுத்த வேண்டும்.
குறுகிய கால ரக விதைப்பண்ணைகளை விதைச்சான்று அலுவலர்களால் பூப்பருவத்தில், (85வது நாள்) முதிர்ச்சி நிலையில், (95வது நாள்) வயல் ஆய்வு பணி மேற்கொள்ளப்படுகிறது.
ஆய்வின் போது விதைப்பு தேதி, ரகம், விதை ஆதாரம், பரப்பு, விலகு துாரம், கலவன் கணக்கீடு, மகசூல் கணக்கீடு செய்தல் போன்ற பணிகள், விதைச்சான்று அலுவலர்களால் மேற்கொள்ளப்படுகிறது.
வயல் தரத்தில் தேரும் விதைப்பண்ணைகள் அறுவடைக்கு அனுமதிக்கப்படுகிறது. அறுவடை முடித்து மூட்டைகளில் பிடிக்கப்பட்ட வயல்மட்ட விதைக்குவியல், அரசு அங்கீகாரம் வழங்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு, சுத்தம் செய்யப்படுகிறது.
வயல் தரங்களில் தேராத விதைப்பண்ணைகள் தள்ளுபடி செய்யப்படுகிறது.சுத்திகரிப்பு செய்யப்பட்ட விதைக்குவியலில் இருந்து விதை மாதிரிகள் எடுத்து, அரசு விதை பரிசோதனை நிலையத்துக்கு விதை மாதிரிகள் அனுப்பப்படும்.
அங்கு விதை ரகங்களின் முளைப்புத்திறன், புறத்துாய்மை, ஈரப்பதம், பிற ரகம் கலவன்கள் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்படும். அதன்பின், விதைத்தரத்தில் தேரும் விதைக்குவியலுக்கு ஆதார நிலை விதைக்குவியலுக்கு வெள்ளை நிற சான்றட்டைகள் (5 ரூபாய் கட்டணம்), சான்று நிலை விதைக்குவியலுக்கு நீல நிற சான்றட்டைகள் (4 ரூபாய், அட்டை) வழங்கப்படும்.
விதைச்சான்று விபரங்கள் அச்சிடப்பட்டு உற்பத்தியாளர் விபர அட்டையுடன் விதைக்கொள்கலன்களுக்கு சான்றட்டை பொருத்தப்பட்டு தரமான விதைகள் விவசாயிகளுக்கு வினியோகிக்க தயாராகிறது.
எனவே, அனைத்து விவசாயிகளும் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதன் வாயிலாக அதிக மகசூல் பெறலாம். சான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்வதன் வாயிலாக, அதிக வருமானம் ஈட்ட முடியும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.