/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளம்பர பலகைகளை உடனடியாக அகற்றுங்கள்! உள்ளாட்சி அமைப்புகளுக்கு கலெக்டர் உத்தரவு
/
விளம்பர பலகைகளை உடனடியாக அகற்றுங்கள்! உள்ளாட்சி அமைப்புகளுக்கு கலெக்டர் உத்தரவு
விளம்பர பலகைகளை உடனடியாக அகற்றுங்கள்! உள்ளாட்சி அமைப்புகளுக்கு கலெக்டர் உத்தரவு
விளம்பர பலகைகளை உடனடியாக அகற்றுங்கள்! உள்ளாட்சி அமைப்புகளுக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : ஆக 12, 2024 01:19 AM
கோவை:கோவை மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
கடந்த மாதத்தில் நடந்த சாலை விபத்துகள்; உயிர் பலி ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த மாதத்தில் மட்டும் மாவட்ட அளவில், 48 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்திருப்பதாக, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை - பொள்ளாச்சி ரோட்டில் ஒருவர் மையத்தடுப்பை தாண்டிச் சென்றபோது, விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்டது. அதனால், பொதுமக்கள் ரோட்டை கடக்கும் இடங்களில், சாலை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய, கலெக்டர் அறிவுறுத்தினார்.
காந்திபுரம், லட்சுமி மில்ஸ் மற்றும் அரசு மருத்துவனை பகுதிகளில் மாநகராட்சி சார்பில் 'எஸ்கலேட்டர்' மற்றும் 'லிப்ட்' வசதியுடன் நடைமேம்பாலம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மருதமலை ரோடு - கவுலி பிரவுன் ரோட்டை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த, வேளாண் பல்கலை மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான இடங்களை அளவீடு செய்து, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்ற வேண்டும். நில அளவீடு செய்யும் பணியை உடனடியாக துவக்க அறிவுறுத்தப்பட்டது. நான்கு வழிச்சாலை உருவாக்குவதற்கான திட்ட கருத்துரு தயாரிக்கவும் நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் ரோட்டில் பஸ்கள் அதிவேகமாக இயக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக, பஸ் ஆபரேட்டர்களை அழைத்து கூட்டம் நடத்தியதில், கூடுதலாக டைமிங் வழங்க கோரியதாகவும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பதிலளிக்கப்பட்டது.
காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் புறப்படும்போது, பயணிகள் ஏறுவதற்காக ஊர்ந்து செல்வதால் சிக்னல் பகுதிக்குச் செல்லவே, 10 நிமிடங்களாகிறது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அவ்வாறு பஸ்கள் ஊர்ந்து செல்லக்கூடாது என, கலெக்டர் கறாராக தெரிவித்தார்.
ஒண்டிப்புதுார் மேம்பாலத்தில் இருந்து, வாகன ஓட்டிகள் கீழிறங்கும்போது விபத்துகள் ஏற்படுகின்றன; அவ்விடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும். குனியமுத்துார் பகுதியில் நான்கு கி.மீ., துாரத்துக்கு ரோட்டை சீரமைக்க வேண்டுமென போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு, ரோடு போட தயாராக இருக்கிறோம்; குடிநீர் வடிகால் வாரியத்தினர் குழாய் பதிக்கும் பணியை முடிக்காமல் இருப்பதால், ரோடு போட முடியவில்லை என நெடுஞ்சாலைத்துறையினர் பதிலளித்தனர். இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்பும் வகையில், சாலை சந்திப்புகளில் இருந்து, 50 மீட்டர் துாரத்துக்குள் எந்தவொரு விளம்பர பலகைகளும் இருக்கக் கூடாது.
அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பலகைகளை, உள்ளாட்சி அமைப்பினர் உடனடியாக அகற்ற வேண்டும்; சாலை விதிகளுக்கு உட்பட்டு வேகத்தடை அமைக்க வேண்டும்; அவற்றில் வர்ணம் பூச வேண்டுமென, கலெக்டர் உத்தரவிட்டார்.

