/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அகற்றப்பட்ட நடைமேம்பாலம்; மீண்டும் நிறுவும் பணி துவக்கம்
/
அகற்றப்பட்ட நடைமேம்பாலம்; மீண்டும் நிறுவும் பணி துவக்கம்
அகற்றப்பட்ட நடைமேம்பாலம்; மீண்டும் நிறுவும் பணி துவக்கம்
அகற்றப்பட்ட நடைமேம்பாலம்; மீண்டும் நிறுவும் பணி துவக்கம்
ADDED : செப் 09, 2024 01:06 AM

கோவை:மேம்பால பணிகள் காரணமாக அகற்றப்பட்ட, பி.எஸ்.ஜி., கல்லுாரி முன் உள்ள நடை மேம்பாலம் மீண்டும் நிறுவப்பட்டது.
அவிநாசி ரோட்டில், 10.1 கி.மீ., துாரத்துக்கு உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. பாலத்தின் பல்வேறு இடங்களிலும், இரு புறங்களிலும் ஏறுதளம், இறங்குதளம் அமைப்பதற்கு, தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, மின் மாற்றிகள், மின் கம்பங்கள், குடிநீர்த் திட்டக்குழாய்கள் மாற்றப்பட்டுள்ளன.
இதே ரோட்டில், பீளமேடு பகுதியில் பி.எஸ்.ஜி.,தொழில்நுட்பக் கல்லுாரியும், எதிர்புறத்தில் அதே கல்வி நிறுவனத்தின் மேலாண்மைக் கல்லுாரியும் உள்ளன.
மாணவர்கள் ஒரு வளாகத்திலிருந்து, மற்றொரு வளாகத்துக்குச் செல்ல, ரோட்டைக் கடக்க, ரோட்டின் நடுவே நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது. மேம்பாலம் கட்டும் பணிக்காக, இப்பாலம் கடந்த, மார்ச் மாதம் இடிக்கப்பட்டது.
பாலம் கட்டி முடித்த பின்பு, ஐந்தரை மீட்டர் உயரத்தில், மீண்டும் நடை மேம்பாலம் அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பாலம், அந்த ரோட்டில் செல்லும் பொது மக்களும் பயன்படுத்தும் வகையில், நடைபாதையில் துவங்கி, மறுபுறத்தில் நடைபாதையில் முடியும் வகையில் அமைக்க வேண்டுமென்றே, அரசாணை வழங்கப்பட்டிருந்தது.
தற்போது, மீண்டும் அந்நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதற்கு முன், இரு புறமும் உள்ள படிக்கட்டுகளும், கல்லுாரி வளாகங்களுக்குள் அமைக்கப்பட்டதால், பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.
தற்போது மீண்டும் பாலம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில், உயர்மட்ட நடைமேம்பாலத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ரோட்டில், படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளன. படிக்கட்டுகள் அமையுள்ள இடத்தில், சாக்கடை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அப்பணிகள் முடிந்த பின், பொதுமக்கள் ஏறி, இறங்க படிக்கட்டுகள் ஏற்படுத்தப்படும்' என்றார்.