ADDED : ஜூலை 31, 2026 07:33 PM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட, 3வது வார்டில் உள்ள, நான்கு சாலைகளும் செப்பனிடப்படாமல், கருங்கற்களால் நிறைந்து காணப்படுகிறது.
பெரியநாயக்கன்பாளையம் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு மூன்றில் உள்ள செல்வம் தோட்டம் குடியிருப்பு பகுதி, சக்தி நகர், 2, 3, 4வது வீதிகளில் தார் சாலை மேம்பாடு செய்ய பொது நிதி திட்டத்தில், 27 லட்சம் ஒதுக்கப்பட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன், நான்கு வீதிகளில் உள்ள பழுதான தார் சாலைகள் பெயர்த்து எடுக்கப்பட்டன. கருங்கல் ஆங்காங்கே பரப்பி விடப்பட்டன.
ஆறு மாதங்கள் கடந்தும் இதுவரை சாலையை மேம்படுத்த, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் ஆகியோரை பலமுறை அணுகி, வேண்டுகோள் விடுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம், தார் சாலை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
