/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு
/
பள்ளிகளில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு
பள்ளிகளில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு
பள்ளிகளில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஆக 20, 2024 02:19 AM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே, நெகமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 2024 - 25ம் ஆண்டு, பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது. முன்னதாக, தலைமையாசிரியர் கோமதி வரவேற்றார்.
கூட்டத்தில், பெரிய நெகமம் தனியார் நிறுவன உரிமையாளர் பாலகிருஷ்ணகுப்தா தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ராஜேஷ், பேரூராட்சி கவுன்சிலர் அரவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம், முக்கியத்துவம் மற்றும் அரசின் கல்வி உதவி திட்டங்கள் குறித்து, பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
அதில், நெகமம் குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநர் சத்தியமூர்த்தி, மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் கடமைகள், அதிகார வரம்புகள், பொறுப்புகள் குறித்து பேசினார். தவிர, பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக திவ்யா, துணைத்தலைவராக முத்துமாரி, உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேவிகா, அரவிந்த் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு சான்றுகளும் வழங்கப்பட்டன. ஆசிரியர் அருண் நன்றி கூறினார்.
* பொள்ளாச்சி அருகே வெள்ளாளபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மேலாண்மை குழு மறுகட்டமைப்புக் கூட்டம் நடந்தது. தலைவர், துணைத்தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், உறுப்பினர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அனைவருக்கும் சான்றுகள் வழங்கப்பட்ட நிலையில், மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
உடுமலை
ஆண்டிகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது.
அனைத்து அரசுப்பள்ளிகளிலும், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு செய்வதற்கு அரசு வழிமுறைகளை வழங்கியுள்ளது. இந்த பள்ளி மேலாண்மைக்குழுவிற்கு முக்கியத்துவம் அளிப்பதற்கும் பள்ளிகளுக்கு அரசு அறிவுறுத்தி வருகிறது.
முதல் 50 சதவீத பள்ளிகளுக்கு ஒரு கால அட்டவணை, அடுத்த 50 சதவீத பள்ளிகளுக்கு ஒரு அட்டவணை வழங்கப்பட்டு அந்த காலகட்டத்திற்குள் மறுகட்டமைப்பு செய்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கை உறுதி படுத்த கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் கோட்டத்தில் முதல்கட்ட 50 சதவீத பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நிறைவடைந்துள்ளது. தற்போது இரண்டாம் கட்டம் துவங்கியுள்ளது.
இதன் அடிப்படையில், ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல் வரவேற்றார்.
பள்ளி மேலாண்மைக்குழு முன்னாள் தலைவர் சித்ரகலா, ராவணாபுரம் அரசு பள்ளி தலைமையாசிரியர் மேனகா முன்னிலையில் கூட்டம் நடந்தது. பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக முருகேஸ்வரி, துணைத்தலைவராக ஷகிலா பானு மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவிக்குழு தன்னார்வலர்கள், கல்வியாளர்கள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி ஆசிரியர் கல்பனா நன்றி தெரிவித்தார்.
வால்பாறை
வால்பாறை அடுத்துள்ள அக்காமலை எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர் அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் தேவி வரவேற்றார்.
கூட்டத்தில், தலைவராக இசக்கியம்மாள், துணைத்தலைவராக ராமாத்தாள் மற்றும், 24 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், பள்ளிக்கு சுற்றுச்சுவர், கழிப்பிடம் கட்டக்கோரி நகராட்சி தலைவரிடம் மனு வழங்கபட்டது.
* வால்பாறை நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு மறு கூட்டமைப்புக்கூட்டம் தலைமை ஆசிரியர் கலைசெல்வி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர் காமாட்சி,வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக ஆரிசா, துணைத்தலைவராக ரஞ்சனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் பள்ளி வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுப்பது, இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கபட்டது.