/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இப்பவே இப்படி; அக்னியில் எப்படி! கோவையில் அதிகரிக்கும் வெப்பநிலை
/
இப்பவே இப்படி; அக்னியில் எப்படி! கோவையில் அதிகரிக்கும் வெப்பநிலை
இப்பவே இப்படி; அக்னியில் எப்படி! கோவையில் அதிகரிக்கும் வெப்பநிலை
இப்பவே இப்படி; அக்னியில் எப்படி! கோவையில் அதிகரிக்கும் வெப்பநிலை
ADDED : ஏப் 05, 2024 12:23 AM

கோவை;கோவையில், வாட்டி வரும் வெப்பத்தால், மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். வெப்ப பக்கவாதத்தில் இருந்து தப்பிக்க, உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் நேற்றுமுன்தினம் நிலவரப்படி, திருச்சி, வேலுார், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக, கோவையில் அதிகபட்சம் 39 டிகிரி, குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. வரும் சில நாட்களுக்கு, கோவையின் வெப்பநிலை சற்று அதிகரிக்கும் என, காலநிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த தாக்கத்தையே தாங்க முடியாத நிலையில், அக்னி வெயில் காலத்தில் என்னாகுமோ என்ற அச்சம், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வெளியில் பயணிப்போர், பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். உடலில் நீர் சத்தை தக்க வைக்க, இளநீர், தர்பூசணி, நுங்கு ஆகியவற்றை உட்கொள்கின்றனர்.
வறண்ட வானிலையால், வீட்டில் வெப்பத்தின் தாக்கம் தணியாததால், 'ஏ.சி.,' பயன்பாடு அதிகரித்துள்ளது. பலரது வீடுகளில் 'ஏ.சி.,' பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஏ.சி., ஏர் கூலர், பேன் விற்பனை கடந்த மாதத்தை விட, 35 முதல் 45 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, கோவை வேளாண் பல்கலையின் காலநிலை மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி கூறியதாவது:
வரும் சில நாட்களில் கோவையின் வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில், நீண்ட நேரம் வெளியில் செல்வதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். கால்நடைகளை வைத்திருப்போர், அவைகளுக்கு, அடிக்கடி தண்ணீர் கொடுத்து வர வேண்டும். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை, மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது. கோழிப்பண்ணைகளில், நனைந்த சாக்குப் பைகளை கட்டித் தொங்க விட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தற்காத்துக் கொள்ள வழி
கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உதவி பேராசிரியர் (பொது மருத்துவ துறை) பாரதிராஜா கூறியதாவது:வெப்பத்தின் தாக்கம் மற்றும் வெப்பம் சார்ந்த தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு, வெப்ப பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புண்டு. உடலின் வெப்பநிலை 98.6 டிகிரி செல்சியஸ். இது,104 எட்டும் போது, வியர்வை வராத நிலை, தோல் காய்ந்து போவது, தோல் சிவப்பாக மாறுவது, குழப்பமான மனநிலை, உளறல் போன்றவை இதன் அறிகுறிகள். சில சமயம் வலிப்பு ஏற்படும் நிலை உருவாகும்.
இதுபோன்ற சமயத்தில், உடனடியாக பாதிக்கப்பட்டவரை மருத்துவமனை அழைத்து வர வேண்டும். முதலுதவியாக, உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, 3 முதல் 4 லிட்டர் நீர், இளநீர், தர்பூசணி பழங்கள், பழச்சாறு ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

