ADDED : ஆக 10, 2026 06:12 PM
மேட்டுப்பாளையம்: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, சமூக பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, மேட்டுப்பாளையத்தில் சி.ஐ.டி.யு., சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களை, போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சி.ஐ.டி.யு., மற்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட துணை தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். தாலுகா ஒருங்கிணைப்பாளர் பெருமாள் துவக்கி வைத்தார். தொழிற் சங்கத்தைச் சேர்ந்த சுரேஷ், கருப்பசாமி, மாதர் சங்க ராஜலட்சுமி உள்பட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மறியல் போராட்டத்தில், தொழிலாளர் நல சட்டங்களை மாற்றியதை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அரசு துறைகளில் உள்ள பணியிடங்களில் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, சமூக பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டனர். அடுத்து மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்களை, மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
