ADDED : ஜூலை 24, 2026 07:22 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சியில் நடந்த, தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட சிறப்பு முகாமில், எம்.எல்.ஏ., சுனில் ஆனந்த் பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில், தூய்மை பணியாளர்களுக்கு, அரசின் சலுகைகள் பெற, தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட சிறப்பு முகாம் நடந்தது. தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கும் பதிவு, திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விபத்து காப்பீடு, குடும்ப அட்டை, மருத்துவ முகாம் போன்ற பல்வேறு சேவைகளை பெரும் வகையில், முகாமில் இடம் பெற்றன. முகாமுக்கு நகராட்சி கமிஷனர் அமுதா தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன், துணைத் தலைவர் அருள் வடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் நகராட்சி நிரந்தர தூய்மை பணியாளர்கள், 41, ஒப்பந்த பணியாளர்கள்,175 பேர் ஆகியோர் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சுனில் ஆனந்த், தூய்மை பணியாளர்களுக்கு, நலவாரிய அட்டைகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
