/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்னணு இயந்திரங்கள் உள்ள 'ஸ்ட்ராங் ரூம்'களுக்கு 'சீல்!' ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு
/
மின்னணு இயந்திரங்கள் உள்ள 'ஸ்ட்ராங் ரூம்'களுக்கு 'சீல்!' ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு
மின்னணு இயந்திரங்கள் உள்ள 'ஸ்ட்ராங் ரூம்'களுக்கு 'சீல்!' ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு
மின்னணு இயந்திரங்கள் உள்ள 'ஸ்ட்ராங் ரூம்'களுக்கு 'சீல்!' ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு
ADDED : ஏப் 21, 2024 01:15 AM

கோவை:கோவையில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஜி.சி.டி., கல்லுாரியில் உள்ள 'ஸ்ட்ராங் ரூம்'களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அந்த அறைக்கு 'சீல்' வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கோவை லோக்சபா தொகுதியில், 2,059 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. ஓட்டுப்பதிவு முடிந்ததும், பூத் ஏஜன்ட்டுகள் முன்னிலையில் சீலிடப்பட்டு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்டுகள், 'விவி பேட்' இயந்திரங்கள் மற்றும் ஓட்டுச்சாவடியில் பயன்படுத்திய இதர பொருட்கள் அனைத்தும் லாரியில் ஏற்றப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன், ஓட்டு எண்ணும் மையமான ஜி.சி.டி., கல்லுாரிக்கு தருவிக்கப்பட்டன.
அவை சட்டசபை தொகுதி வாரியாக அமைக்கப்பட்ட, 'ஸ்ட்ராங் ரூம்' களில் ஓட்டுச்சாவடி எண்கள் வாரியாக வரிசையாக வைக்கப்பட்டன.
அதிகாரிகள், வேட்பாளர்கள் ஆய்வு
ஆறு சட்டசபை தொகுதிகளிலும் பயன்படுத்திய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வந்தடைந்து, அடுக்கி வைக்கப்பட்டதும், மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார், ஓட்டு எண்ணிக்கை மைய பொறுப்பாளரான, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
அதன்பின், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், சட்டசபை தொகுதி வாரியாக, 'ஸ்ட்ராங் ரூம்'கள் சீலிடப்பட்டன.
வேட்பாளர்கள் கணபதி ராஜ்குமார், சிங்கை ராமச்சந்திரன் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதன்பின், ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்திய பொருட்கள் சரிபார்க்கப்பட்டு, திரும்ப பெற்று, அதற்குரிய 'ஸ்ட்ராங் ரூம்' களில் பாதுகாப்பாக 'சீல்' வைக்கப்பட்டன.
துப்பாக்கி ஏந்திய போலீஸ்
ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் நான்கு திசைகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வளாகம் முழுவதும் 'சிசி டிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை, 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில், போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.
மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, ஆறு 'ஸ்ட்ராங் ரூம்'களில் வைத்து, 'சீல்' வைத்திருக்கிறோம். மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. ஆயுதம் தாங்கிய, மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த, 24 பேர், ஒரு 'ஷிப்ட்'டுக்கு பணிபுரிவர்; இதேபோல் மூன்று 'ஷிப்ட்' பணிபுரிவர். உட்புறம், வெளிப்புறம் என இரு அடுக்காக பாதுகாப்பு பணியில் இருப்பர். ஒரு 'ஷிப்ட்'டுக்கு, 233 பேர் பணியில் ஈடுபடுவர்.
வளாகம் முழுவதும், 250 'சிசி டிவி' கேமராக்கள் பொருத்தியுள்ளோம்; கூடுதலாக தேவைப்பட்டால் பொருத்துவோம். மின் தடை ஏற்பட்டாலும் இயங்கும் வகையில், 'ஆட்டோமேட்டிக் பவர்' வசதியுள்ள கேமரா பொறுத்தியுள்ளோம்; ஏற்கனவே சோதனை செய்து பார்த்து விட்டோம்.
இதை அரசியல் கட்சியினர் கண்காணிக்க, பிரத்யேகமாக ஒரு பகுதி ஒதுக்கியுள்ளோம். அவர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கிறோம். உணவு தேவையை, அந்தந்த கட்சியினரே பார்த்துக் கொள்ள வேண்டும். வளாகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு, கலெக்டர் கூறினார்.

