/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிவாலயங்களில் இன்று சிவராத்திரி விழா கோலாகலம்
/
சிவாலயங்களில் இன்று சிவராத்திரி விழா கோலாகலம்
ADDED : பிப் 25, 2025 11:54 PM
சிவராத்திரி நாளான இன்று, சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெற, பக்தர்கள் விரதமிருந்து வழிபாடு செய்கின்றனர்.
இன்று ஒருநாள் இரவு, சிவ பக்தர்கள் இரவு முழுக்க கண்விழித்து, சிவபெருமானை நினைத்து பூரண கும்பங்களை வைத்து வழிபடுகின்றனர்.
மகா சிவராத்திரி மகிமை நிறைந்தது. சிவராத்திரி நாளில் சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டால், ஓராண்டு முழுக்க சிவபூஜை செய்த புண்ணியம் கிடைக்கும். இதன் மகிமைகள் கருட, அக்னி, கந்த, பத்ம, அருணாசல, சிவ, புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன.
சிவராத்திரி விரதத்தை பின்பற்றி மகாவிஷ்ணு, மகாலட்சுமி சக்கர ஆயுதத்தை பெற்றனர், பிரம்மா, சரஸ்வதியை பெறும் பாக்யம் அடைந்தார். நந்தியம் பெருமான் சிவராத்திரி மகிமை எடுத்துக் கூறியதை அடுத்து முருகன், சூரியன், சந்திரன், மன்மதன், இந்திரன், அக்னி, குபேரன் ஆகியோர் நல்ல வரங்களைப் பெற்றனர் என்று, புராணங்கள் சொல்கின்றன.
மகாசிவராத்திரி நாளில், பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்த போது பொங்கி வந்த, ஆலகால விஷம், மண்ணுலக மக்களை பாதிக்கக் கூடாது என்று எண்ணிய சிவபெருமான், ஆலகால விஷத்தினை தனது உடலினுள் தாங்கி, நீலகண்டனாக மாறி உலகத்தை அழிவில் இருந்து காப்பாற்றியது, சிவராத்திரி நாளில் தான்.
சிவாலயங்களில் இன்று நான்கு ஜாமங்களிலும், நான்கு கால பூஜை நடைபெறும். வில்வ அர்ச்சனை மிகவும் உகந்தது. சிவராத்திரி நாளில் மேற்கொள்ளும் விரதத்தின் பெருமையை, வேறு எந்த விரதத்துடனும் ஒப்பிட முடியாது. இந்நாளில், சிவபெருமானை வழிபட்டு அருளை பெறுவோம்.
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே உள்ள வீரபத்திர சுவாமி கோவிலில், 65வது ஆண்டு மகா சிவராத்திரி விழா இன்று நடைபெற உள்ளது.
இன்று காலை, 8:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. மாலை,4:35 மணிக்கு கொடியேற்றமும், தீபாரத்தனையும் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து ஆலாங்கொம்பில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் இருந்து, முளைப்பாரி எடுத்து வருதலும், சக்தி அழைத்தலும் நடைபெற உள்ளது. 27ம் தேதி காலை அபிஷேக தீபாராதனையும் தொடர்ந்து கன்னிமார் பூஜையும் நடைபெற உள்ளது. சிறுமுகை ராமகான சபா மற்றும் தண்டபாணி குழுவினரின் நாம சங்கீர்த்தன பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மதியம், 3:00 மணிக்கு மறு பூஜையும், தீபாராதனையும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
அன்னுார்: பச்சாபாளையத்தில் ஜீவகுரு தன்னாசியப்பன் கோவில் மற்றும் பரமசிவன், கருப்பராய சுவாமி கோவில்கள் உள்ளன.
இங்கு மஹா சிவராத்திரி விழா இன்று நடைபெறுகிறது. பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வரும் வைபவம் நடைபெறுகிறது. இதையடுத்து மாலையில் பள்ளய பூஜையும், ஜோதி வைத்தலும் நடக்கிறது. இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
நாளை (27ம் தேதி) மாசி திருவிழாவும், அமாவாசை வழிபாடும் நடக்கிறது. வருகிற 28ம் தேதி காலை மறுபூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தன்னாசியப்பன் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
சூலுார்: சூலுார் அடுத்த அரசூர்பரமசிவன் மற்றும் கந்தாயி அப்பர் கோவிலில் இன்று காலை, 8:00 மணிக்கு கருப்பராயன் கோவிலில் படி விளையாட்டு நடக்கிறது. 12:00 மணிக்கு, சூரமடை கோவிலில் அபிஷேக, அலங்கார பூஜை நடக்கிறது.
நாளை அதிகாலை, 2:30 மணிக்கு கந்தாயி அப்பர் கோவில் நடை திறக்கப்படுகிறது. 4:00 மணிக்கு ஜோதி ஏற்றுதல், 5:00 மணிக்கு அடி அளந்து வணங்கும் பூஜையும், 11:00 மணிக்கு சுவாமி குண்டத்துக்கு புறப்படுதலும், கவ்வாள சேவை, பால் குண்டம் திறந்தபின், 5:00 மணிக்கு பள்ளய பூஜை நடக்கிறது.
இதேபோல், அரசூர் வேம்படி ஈஸ்வரர் கோவிலில், இன்று இரவு மகா சிவராத்திரி பூஜை நடக்கிறது. 8:00 மணிக்கு முதல் கால பூஜை, 11:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, 4:30 மணிக்கு நான்காம் கால அபிஷேக, அலங்கார பூஜை நடக்கிறது.