/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீரை மாசுபடுத்தினால் ஆறு மாதம் சிறை; கேரளத்தை போல தமிழகத்திலும் வரணும் விழிப்புணர்வு
/
நீரை மாசுபடுத்தினால் ஆறு மாதம் சிறை; கேரளத்தை போல தமிழகத்திலும் வரணும் விழிப்புணர்வு
நீரை மாசுபடுத்தினால் ஆறு மாதம் சிறை; கேரளத்தை போல தமிழகத்திலும் வரணும் விழிப்புணர்வு
நீரை மாசுபடுத்தினால் ஆறு மாதம் சிறை; கேரளத்தை போல தமிழகத்திலும் வரணும் விழிப்புணர்வு
ADDED : மே 01, 2024 11:46 PM

கோவை : கடும் வறட்சி காரணமாக, நீர் நிலைகளை மாசுபடுத்தினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம், ஆறு மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என, தமிழக எல்லையோர கேரள ஊராட்சி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை போதுமான அளவு கைகொடுக்காததால் தமிழகத்தில், கடும் வறட்சி நிலவுகிறது.
நடப்பாண்டு கோடை மழையும் 80 சதவீதம் வரை குறைவாகப் பொழிந்துள்ளது. இதனால், குடிநீராதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழக எல்லையில் உள்ள கேரள ஊராட்சியான சோலையூரும் இந்த கடும் கோடைக்குத் தப்பவில்லை.
பவானி, சிறுவாணி, கொடுங்கரைப்பள்ளம் ஆகிய ஆறுகள் வறண்டு காணப்படுவதால், அட்டப்பாடி அதைச்சுற்றியுள்ள கிராமங்களில், தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், நீர் நிலைகளை மாசுபடுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சோலையூர் ஊராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
'குடிநீர் பற்றாக்குறை தீவிரமாக உள்ளதால், நீர் நிலைகளில் குளித்தல், துணி துவைத்தல் உள்ளிட்ட எவ்வித மாசுபடுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. மீறி ஈடுபட்டால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இக்குற்றத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும், ஆறு மாத சிறை தண்டனையும் விதிக்க முடியும்' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவையிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தண்ணீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இதுபோன்ற கடும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

