/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சீறும் சிறுத்தை! * பீதியில் மலை கிராம மக்கள் * வனத்துறை வாகனம் சிறைபிடிப்பு
/
சீறும் சிறுத்தை! * பீதியில் மலை கிராம மக்கள் * வனத்துறை வாகனம் சிறைபிடிப்பு
சீறும் சிறுத்தை! * பீதியில் மலை கிராம மக்கள் * வனத்துறை வாகனம் சிறைபிடிப்பு
சீறும் சிறுத்தை! * பீதியில் மலை கிராம மக்கள் * வனத்துறை வாகனம் சிறைபிடிப்பு
ADDED : ஆக 09, 2024 01:54 AM

தொண்டாமுத்துார்;தொண்டாமுத்துார் அருகே அட்டுக்கல் பிரிவில், கன்றுக் குட்டியை சிறுத்தை கடித்து கொன்றதால், ஆவேசமடைந்த விவசாயிகள், வனத்துறையினரின் வாகனத்தை சிறைபிடித்தனர்.
கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் வட்டாரத்தில், கோவை, போளுவாம்பட்டி, மதுக்கரை ஆகிய மூன்று வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகள் உள்ளன. இங்கு மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள கிராமங்களில், காட்டு யானைகள் மற்றும் காட்டு பன்றிகள் புகுந்து பயிர்களையும், வீடுகளையும் சேதப்படுத்துகின்றன.
நேற்று, அதிகாலை அட்டுக்கல் பிரிவில், விவேகானந்தன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்த ஒரு சிறுத்தை, கன்று குட்டியை கடித்து கொன்றுள்ளது. இதுகுறித்து தகவல் பரவியதும், நேற்று காலை அங்கு ஏராளமான விவசாயிகள் கூடினர்.
அப்போது, வனத்துறையினர் தங்கள் வாகனத்தில் வந்துள்ளனர். ஆத்திரத்தில் இருந்த விவசாயிகள், 'வனத்துறையினர் தோட்டத்திற்குள் வரக்கூடாது. மாவட்ட வன அலுவலர் நேரில் வரவேண்டும்' என கூறி, வாகனத்தை சிறைபிடித்தனர்.
பேச்சுவார்த்தை
தகவலறிந்து, தொண்டாமுத்தூர் போலீசார் மற்றும் கோவை வனச்சரகர் திருமுருகன் அங்கு வந்து, விவசாயிகளுடன் பேச்சு நடத்தினர்.
'வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள, வனத்துறை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்படும். சிறுத்தையை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்படும். ஒரிரு நாளில், கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்கப்படும்' என, உறுதியளித்தனர். அதன்பின், விவசாயிகள் சமாதானமடைந்து, வனத்துறையினரின் வாகனத்தை விடுவித்தனர்.
அப்பகுதியில், நேற்று காலை, காட்டு யானைகளால் சேதமடைந்த மரவள்ளி, தென்னை மரங்கள், மின் வேலியை, வனத்துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
''கண்டுகொள்ளாத வனத்துறை
வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதை வனத்துறையினர் தடுப்பதில்லை. தோட்டங்களுக்குள் புகுந்தது குறித்து தகவல் கொடுத்தாலும் சரி வர வருவதில்லை. வனத்துறையினருடன் வரும் தன்னார்வலர்கள், விவசாயிகளை அவமரியாதையாக பேசுகின்றனர். இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் கண்டு கொள்வதில்லை.
- விவசாயிகள்