/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டக்கலைத்துறை மானிய திட்டங்கள் விவசாயிகள் பயன்பெற சிறப்பு முகாம்
/
தோட்டக்கலைத்துறை மானிய திட்டங்கள் விவசாயிகள் பயன்பெற சிறப்பு முகாம்
தோட்டக்கலைத்துறை மானிய திட்டங்கள் விவசாயிகள் பயன்பெற சிறப்பு முகாம்
தோட்டக்கலைத்துறை மானிய திட்டங்கள் விவசாயிகள் பயன்பெற சிறப்பு முகாம்
ADDED : ஜூன் 27, 2024 09:50 PM

உடுமலை : மடத்துக்குளம் வட்டாரத்தில், தோட்டக்கலைத்துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:
மடத்துக்குளம் வட்டாரத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பாப்பான்குளம், கொழுமம் வருவாய் கிராமங்களில், அதிகளவு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
இக்கிராமங்களிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் திட்டங்கள் சென்று சேரும் வகையில், இன்று (28ம் தேதி), காலை, 10:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை ஊராட்சி மன்ற அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.
இம்முகாமில், நுண்ணீர் பாசன திட்டம், துணைநிலை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ்,தானியங்கி சொட்டு நீர் கருவி, தனிநபர் நீர் சேமிப்பு கட்டமைப்பு, ஆழ்துளை கிணறு அமைத்தல், பி.வி.சி., பைப் லைன் அமைக்கலாம்.
தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், தக்காளி, கத்தரி, மிளகாய், வெங்காயம், பப்பாளி, பேரிச்சை பரப்பு அதிகரித்தல், தனிநபர் நீர் சேமிப்பு கட்டமைப்பு, நிலப் போர்வை அமைத்தல்,
ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை திட்டத்தில், மண்புழு படுக்கை, தேனீ வளர்ப்பு, சிப்பம் கட்டும் அறை, வெங்காய சேமிப்பு கிடங்கு, நடமாடும் காய்கனி விற்பனை வண்டி, பண்ணை குறைபாடு சரி செய்தல் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், நிரந்தர காய்கறி பந்தல் அமைத்தல், மாநில வளர்ச்சி தோட்டக்கலை திட்டம், தென்னை பரப்பு அதிகரித்தல், நீண்ட கால பயிர்களில் ஊடுபயிராக காய்கறி பயிர் வளர்த்தல், தென்னையில் ஊடுபயிராக வாழை பயிரிடுதல், பாரம்பரிய காய்கறிகள் வளர்ப்பு, தென்னையில் உற்பத்தி திறன் மேம்பாடு, பனை மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ், பனை விதைகள் வழங்குதல் போன்றவை பயன்பெறலாம்.
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பழ நாற்றுகள் வழங்குதல், காய்கறி வளர்ப்பை ஊக்குவித்தல், நீண்டகால பயிர்கள் பரப்பு அதிகரித்தல், வேளாண்மை இயந்திர மயமாக்கும் துணை இயக்கத் திட்டத்தின் கீழ், பழம் பறிக்கும் கருவிகள் வழங்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், ஆதார் நகல் மட்டும் கொண்டு வந்து, பாப்பான்குளம், கொழுமம் கிராம ஊராட்சி அலுவலகத்தில் நடக்கும் சிறப்பு முகாமில் பதிவு செய்து கொள்ளலாம்.
உதவி தோட்டக்கலை அலுவலர்கள், தாமோதரன், 96598 38787, நித்யராஜ், 63821 29721ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு, உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.